தமிழகத்தில் பாஜக-பாமக தொகுதிச் சிக்கல் தீர்ந்தது

படத்தின் காப்புரிமை AP
Image caption பாஜக கூட்டணியில் சிக்கல் தீர்ந்தது

தமிழகத்தில் பாஜக அணியில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு எந்தத் தொகுதிகள் என்ற பிரச்சினையில் ஏற்பட்ட முட்டுக்கட்டை நிலை தீர்ந்து, இன்று பாஜக அணியில் போட்டியிடும் கட்சிகளின் தொகுதி விவரங்கள் அறிவிக்கப்பட்டன.

பாரதீய ஜனதாக் கூட்டணியில் தேமுதிகவிற்கு 14 இடங்களும், பாட்டாளி மக்கள் கட்சிக்கு 8 இடங்களும், பாரதீய ஜனதாக் கட்சிக்கு 8 இடங்களும், ம.தி.மு.கவிற்கு 7 இடங்களும் கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி ஆகியவற்றுக்குத் தலா 1 இடமும் அறிவிக்கப்பப்ட்டுள்ளது என பாஜகவின் தேசியத் தலைவர் ராஜ்நாத்சிங் இன்று சென்னையில் அறிவித்தார்.

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை முதலில் துவங்கிய கட்சி பாரதீய ஜனதாக் கட்சிதான். இருந்தபோதும், இந்தக் கூட்டணியில் தொகுதி உடன்பாடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து இழுபறியாகவே நீடித்துவந்தன.

முதலில் எண்ணிக்கை தொடர்பான பிரச்சினைகளும் பிறகு எந்தத் தொகுதி யாருக்கு என்ற குழப்பமும் நீடித்தது.

Image caption கூட்டணி தலைவர்கள்

இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்றுவந்தன.

இதைத் தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவதற்காக பாஜக தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங் இன்று பிற்பகல் சென்னை வந்தார்.

இதற்குப் பிறகு ராஜ்நாத் சிங்கை தே.மு.திக தலைவர் விஜயகாந்த், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, பாட்டாளிமக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், தலைவர் ஜி.கே. மணி, இந்திய ஜனநாயகக் கட்சித் தலைவர் பாரிவேந்தர், கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின் ஈஸ்வரன் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர்.

அதற்குப் பிறகு நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் சந்தித்துப் பேசினர். தேமுதிகவின் தலைவர் விஜயகாந்த், மதிமுகவின் பொதுச்செயலர் வைகோ, பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், தலைவர் ஜி.கே. மணி, இந்திய ஜனநாயகக் கட்சியின் பாரிவேந்தர், புதிய நீதிக் கட்சியின் ஏ.சி. சண்முகம், கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின் ஈஸ்வரன் உள்ளிட்டோர் ராஜ்நாத்சிங்குடன் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை முடிவடைந்த பின்னர் அனைத்து கூட்டணிக் கட்சித் தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். தமிழக பாரதீய ஜனதாக் கூட்டணியில் ஏற்பட்டுள்ள தொகுதிப் பங்கீட்டு விவரத்தையும் ராஜ்நாத்சிங் அதிகாரபூர்வமாக வெளியிட்டார்.

போட்டியிடும் கட்சிகள், தொகுதிகள் விவரம்

பாரதீய ஜனதாக் கட்சிக்கு தென்சென்னை, வேலூர், தஞ்சாவூர், நீலகிரி, கோயம்புத்தூர் , சிவகங்கை, ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

தே.மு.திகவிற்கு, திருவள்ளூர், மத்திய சென்னை, வடசென்னை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், திருச்சி, கடலூர், மதுரை, திருநெல்வேலி, திருப்பூர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

ம.தி.மு.கவிற்கு, காஞ்சிபுரம், ஈரோடு, தேனி, விருதுநகர், தூத்துக்குடி, ஸ்ரீபெரும்புதூர், தென்காசி ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

பாட்டாளி மக்கள் கட்சிக்கு அரக்கோணம்,கிருஷ்ணகிரி, தருமபுரி, ஆரணி, சிதம்பரம், மயிலாடுதுறை, திருவண்ணாமலை, நாகப்பட்டினம் ஆகியதொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்ட்டுள்ளன.

கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சிக்கு பொள்ளாச்சி தொகுதியும் இந்திய ஜனநாயகக் கட்சிக்கு பெரம்பலூர் தொகுதியும் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளன.

இந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய ராஜ்நாத் சிங், பாரதீய ஜனதாக் கட்சி ஆட்சிக்கு வந்தால், தமிழக மீனவர் பிரச்சனைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.