புதுச்சேரி தொகுதி: தேசிய ஜனநாயக கூட்டணியில் குழப்பம்?

புதுச்சேரி முதல்வரும் என்.ஆர்.காங்கிரஸ் தலைவருமான ரங்கசாமி
Image caption புதுச்சேரி முதல்வரும் என்.ஆர்.காங்கிரஸ் தலைவருமான ரங்கசாமி

இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கான பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் புதுச்சேரி நாடாளுமன்றத் தொகுதியைப் பொறுத்தவரை குழப்பம் நீடிப்பதாகத் தெரிகிறது.

புதுச்சேரி தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ஆர்.கே.ஆர். அனந்தராமன் போட்டியிடுவார் என அக்கட்சியின் தலைமை முன்கூட்டியே அறிவித்திருந்த நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பிருந்தே அனந்தராமன் பிரச்சாரம் செய்துவந்தார்.

மாநிலத்தை ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்ந்ததை அடுத்து, புதுச்சேரி தொகுதி தமக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது என அக்கட்சி கூறுகிறது.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் ராதாகிருஷ்ணன் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, அவர் தனது பிரச்சாரப் பணிகளை ஆரம்பித்துள்ளார்.

ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணியில் புதுச்சேரி தொகுதி என்.ஆர்.காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது என்பதை அனந்தராமன் மறுத்துள்ளார்.

கூட்டணியில் புதுச்சேரி தொகுதிக்கு யார் என்பதில் இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை என்று அவர் வாதிட்டுள்ளார்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அதேநேரம். சென்னையில் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கை புதுவை முதல்வர் ரங்கசாமி சந்தித்தபோதே, புதுச்சேரி தொகுதி என்.ஆர்.காங்கிரஸுக்குத்தான் என்பது தீர்மானிக்கப்பட்டுவிட்டது என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வி.பாலன் கூறியுள்ளார்.

புதுச்சேரி தொகுதி யாருக்கு என்பதை கூட்டணிக்கு தலைமை வகிக்கும் பாஜக தெளிவாக அறிவித்துவிட்டது என்றும், இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியினரும் இத்தொகுதியில் போட்டியிடுவதாகக் கூறுவது கூட்டணி தர்மத்துக்கு முரணானது என்றும் பாலன் தெரிவித்தார்.

என்.ஆர். காங்கிரஸ், பாமக ஆகிய இரண்டு கட்சிகளின் வேட்பாளர்களுமே பிரச்சாரம் செய்துவரும் சூழலில், புதுவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி எந்த அளவுக்கு சேர்ந்து செயலாற்றப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.