கோயம்புத்தூர் மாணவி கொலை: மரண தண்டனையை உறுதி செய்தது உயர்நீதிமன்றம்

சென்னை உயர்நீதிமன்றம்
Image caption சென்னை உயர்நீதிமன்றம்

தமிழ்நாட்டில் உள்ள கோயம்புத்தூரில் 2010ஆம் ஆண்டில் 10 வயது மாணவியும் அவரது தம்பியும் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது.

கோயம்புத்தூரில் வசித்துவந்த ரஞ்சித் குமார் ஜெயின் என்பவரது 11 வயது மகள், 8 வயது மகன் ஆகிய இருவரும் முறையே ஐந்தாம் வகுப்பும் இரண்டாம் வகுப்பும் படித்துவந்தனர்.

இந்த இரண்டு பேரும் 2010ஆம் ஆண்டு அக்டோபர் 29ம் தேதி பள்ளி செல்லும்போது காணாமல் போயினர்.

காவல்துறையினர் இதுதொடர்பாக நடத்திய தேடுதல் வேட்டையில், இவ்விரு சிறுவர்களையும் பொள்ளாச்சியை சேர்ந்த கார் ஒட்டுனர் மோகன்ராஜ் என்பவரும், அவருடைய நண்பர் மனோகரன் என்பவரும் சேர்ந்து கடத்தியதும், சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு, சிறுவனுடன் சேர்ந்து தண்ணீரில் தள்ளி கொல்லப்பட்டதும் தெரியவந்தது.

குற்றம்சாட்டப்பட்ட இருவரும் கைதுசெய்யப்பட்ட நிலையில், அதே ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் தேதியன்று மோகன்ராஜ், காவல்துறையினருடன் நடந்த மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து மனோகரன் மீது கடத்தல், பாலியல் பலாத்காரம், கொலை ஆகிய குற்றங்களுக்கான சட்டப்பரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன.

அந்த வழக்கை விசாரித்துவந்த மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் மனோகரனுக்கு மரண தண்டனை விதித்து 1.11.2012 அன்று தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து, மனோகரன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ராஜேஸ்வரன், டி.என். பிரகாஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது.

இந்த நிலையில், மனோகரனின் மேல்முறையீட்டு மனுவை இன்று தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம், அவருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்துள்ளது.