காவல்நிலையம் மீது தாக்குதல்: 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பு

தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டம் புத்தூர் காவல் நிலையம் மீது 1991ஆம் ஆண்டு நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதல் தொடர்பான வழக்கில் தமிழர் விடுதலைப் படையைச் சேர்ந்த சுப. இளவரசன் உள்ளிட்ட 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து பூந்தமல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

புத்தூர் காவல் நிலையத்தின் மீது ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் ஒரு காவலர் பலியானார். 4 காவலர்கள் காயமடைந்தனர். இந்தத் தாக்குதல் தொடர்பாக 11 பேர் கைதுசெய்யப்பட்டனர். இவர்களில் ஒருவர் இறந்துவிட, ஒருவர் அரசுத் தரப்பு சாட்சியமாக மாறினார்.

சென்னைக்கு அருகில் உள்ள பூந்தமல்லியில் உள்ள வெடிகுண்டுகள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் சுப.இளவரசன், சுந்தரம், வெங்கடேசன், அமல்ராஜ், குமார், வல்லரசு, ரவி, செங்குட்டுவன் என்ற மணிமாறன், முருகேசன் ஆகிய 9 பேர் மீது இது தொடர்பான வழக்கு நடைபெற்றுவந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராமசாமி, இவர்கள் 9 பேரும் குற்றவாளிகள் என்றும் இவர்களுக்கான தண்டனை விவரம் 24ஆம் தேதியன்று அறிவிக்கப்படும் என 21ஆம் தேதியன்று அறிவித்தார்.

அதன்படி, குற்றம் சாட்டப்பட்டுள்ள சுப.இளவரசன், வெங்கடேசன், அமல்ராஜ் குமார், வல்லரசு, ரவி, முருகேசன், செங்குட்டுவன் என்கிற மணிமாறன் ஆகிய 8 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

சுந்தரம் என்ற நபருக்கு மட்டும் 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 5,500 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.