சுனந்தா மரணம்: இதுவரை முதல் தகவல் அறிக்கை இல்லை

மனைவி சுனந்தாவுடன் சசி தரூர் (கோப்பு படம்)
Image caption மனைவி சுனந்தாவுடன் சசி தரூர் (கோப்பு படம்)

இந்தியாவின் மனிதவள மேன்பாட்டுத் துறை இணையமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் மரணமடைந்த விவகாரத்தில், தற்போது வரை முதல் தகவல் அறிக்கையை தயாரிக்க முடியாத நிலை நீடிப்பதாக டில்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

சுனந்தா புஷ்கரின் மரணத்திற்கு பிறகு நடைபெற்ற பிரேத பரிசோதனையில், அவர் விஷம் உட்கொண்டதால் உயிரிழக்கவில்லை என தெரிய வந்துள்ளதாகவும், கடந்த வாரம் பெறப்பட்ட சுனந்தாவின் மரணம் குறித்த மத்திய தடவியல் ஆய்வகத்தின் அறிக்கையிலும் தெளிவான விவரங்கள் இல்லாததால், மேலும் இதன் மீதான விசாரணை தொடரும் என டில்லி காவல்துறையின் உயர் அதிகாரி பி.எஸ்.பாசி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அவர் இது குறித்து மேலும் பேசியபோது, சுனந்தா விஷம் உட்கொள்ளவில்லை என முடிவுகள் கூறினாலும், இது போன்ற வேறு எதுவும் காரணங்களுக்கு வாய்ப்பு உள்ளதா என்றும் விசாரணை தொடர்ப்படுவதாக கூறினார்.

சுனந்தா மரணமடைந்து 2 மாதங்கள் கடந்துள்ள நிலையிலும், முதல் தகவல் அறிக்கையை தயாரிக்க முடியாத நிலை நீடிப்பதாக கூறிய அவர், அதற்கான தேவையும் ஏற்படவில்லை என்றார்.

சந்தேகம் ஏற்படுத்தும் வகையிலான ஆதாரங்கள் கிடைக்கும் வரை சி ஆர் பி சி சட்டம் 174ஆம் பிரிவின்படி இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெறும் என்றும் அவர் அப்போது கூறினார்.

இதனை தொடர்ந்து அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் மருத்துவர் குழுவின் ஆலோசனை பெறப்பட்டு மேலும் முடிவுகள் எட்டப்படும் எனவும் தெரிவித்தார்.

கடந்த ஜனவரி மாதம் சுனந்தா புஷ்கர், டில்லியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் அறையில் இறந்து காணப்பட்டார்.

அளவுக்கு அதிகமாக மருந்து உட்கொண்டதால் சுனந்தா இறந்திருக்கலாம் என்று டில்லி காவல் துறையினர் அப்போதும் தெரிவித்திருந்தனர்.

இவர் இறப்பதற்கு சில தினங்களுக்கு முன்னர் சசி தரூரின் டுவிட்டர் கணக்கிலிருந்து வெளியான தகவல்கள் மூலம் சசி தரூர் திருமணத்திற்கு வெளியிலான தொடர்பு வைத்துள்ளார் என்ற சர்ச்சை எழுப்பியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.