ஹிந்தி நடிகை நந்தா காலமானார்

படத்தின் காப்புரிமை navketan
Image caption காலமான நந்தா

பழம்பெரும் ஹிந்தி நடிகை நந்தா மாரடைப்பால் இன்று காலமானார்.

அவருக்கு வயது 75.

இன்று காலை மும்பையில் உள்ள தனது இல்லத்தில் அவர் காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

1950களில் குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் தோன்றிய அவர், பின் பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

அவர் நடித்த திரைப்படங்களில் ‘ஜப் ஜப் பூல் கிலே’, ‘தீன் தேவியான்’ மற்றும் ‘த டிரேன்’ ஆகியவை மிகவும் பிரபலமானவை. 1982ஆம் ஆண்டில் அவர் திரைப்படங்களில் நடிப்பதிலிருந்து ஓய்வு பெற்றார்.

எந்த உடல் நலக்குறைவும் இல்லாது இருந்த நந்தாவின் மரணம் தங்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளதாக அவரது உறவினர் ஒருவர் செய்தி நிறுவனம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

ஹிந்தி முன்னணி நடிகர்களான அஷோக் குமார், கிஷோர் குமார், ராஜேஷ் கன்னா போன்றவர்களுடன் இணைந்து இவர் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக நடிகர் சஷி குமாருடன் இணைந்து இவர் 8 திரைப்படங்களில் நடித்துள்ளார்.

‘அஹிஸ்டா அஹிஸ்டா’, ;மஸ்தூர்’ மற்றும் ‘பிரேம் ரோக்’ போன்ற திரைப்படங்களில் இவர் துணை நடிகையாகவும் நடித்துள்ளார்.