ராஜிவ் கொலைக் கைதிகள் விடுதலையை கோரவில்லை: மத்திய அரசு

Image caption தூக்குத் தண்டனை பெற்றவர்கள் தண்டனைக் குறைப்பு கேட்டார்களே தவிர விடுதலையை கோரவில்லை: மத்திய அரசு

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர்கள் ஏழு பேரும் தம்மை விடுதலை செய்ய வேண்டுமென்று கோராதபோது, தமிழக அரசு தானாக முன்வந்து அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்தது ஏன் என்று மத்திய அரசு இந்திய உச்சநீதிமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளது.

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களை விடுதலை செய்ய தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகளுக்கு எதிராக மத்திய அரசு தாக்கல் செய்த மனு தொடர்பில் இன்று புதன்கிழமை விசாரணை நடைபெற்றது.

இதன்போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் வாகன்வதி, ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட ஏழுபேரும் தம்மை விடுதலை செய்யக் கோரவில்லை என்றார்.

மரண தண்டனையை குறைக்க மனுக் கொடுத்த மூவரும் விடுதலை தொடர்பில் எந்தவிதமான கோரிக்கையையும் முன்வைக்காத போது, எதற்காக தமிழக அரசு அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்தது என்று அவர் கேள்வி எழுப்பினார்.

மேலும், இந்த வழக்கில் மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ, விசாரணையை மேற்கொண்டதால் இது தொடர்பிலான முடிவுகளை எடுக்க மத்திய அரசுக்கு முழு அதிகாரம் உள்ளதாகவும் அட்டார்னி ஜெனரல் தெரிவித்தார்.

அதேநேரம், தண்டிக்கப்பட்டவர்கள் மீது ஆயுதம் தாங்கியமை, வெடிபொருள் பயன்படுத்தியமை போன்ற குற்றச் சட்டப் பிரிவுகளின் கீழும் வழக்கு தொடரப்பட்டதால், தமிழக அரசுக்கு அவர்களில் தொடர்பில் முடிவு எடுக்க அதிகாரம் இல்லை என்றும் வாகன்வதி சுட்டிக்காட்டினார்.

ஆனால், தண்டிக்கப்பட்ட 7 பேரின் மீதும் எத்தகைய வழக்குகள் பதியப்பட்டிருந்தாலும் அதிகபட்ச தண்டனையை அவர்கள் அனுபவித்து முடித்து விட்டதாக தமிழக அரசு தரப்பில் இந்த வழக்கில் ஆஜரான வழக்கறிஞர் ராகேஷ் திரிவேதி வாதாடினார்.

அவர்களை விடுவிக்கும் முடிவினை எடுக்க சட்டமுறைப்படி தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.