எழுத்தாளர், இலக்கிய விமர்சகர், தி.க.சிவசங்கரன் காலமானார்

Image caption காலமானார் தி.க.சி

தி.க.சி என இலக்கிய வட்டாரங்களில் அறியப்பட்ட இலக்கிய விமர்சகரான தி.க. சிவசங்கரன் செவ்வாய்க்கிழமை இரவு திருநெல்வேலியில் காலமானார்.

அவருக்கு வயது 89.

1925ஆம் ஆண்டு மார்ச் 30ஆம் தேதி திருநெல்வேலியில் பிறந்த சிவசங்கரன், கடந்த பிப்ரவரி மாத இறுதியில் இருந்து உடல் நலமின்றி பாளையங்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.

நுரையீரல் நோய்க்காக அனுமதிக்கப்பட்ட அவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு புற்று நோய் இருப்பது கண்டறியப்பட்டது.

உடல்நிலை மோசமடைந்ததையடுத்து திருநெல்வேலியில் உள்ள அவரது பூர்வீக இல்லத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு செவ்வாய்க்கிழமை இரவு சுமார் 10.30 மணியளவில் காலமானார்.

1945லிருந்து 64ஆம் ஆண்டுவரை வங்கி ஊழியராகப் பணியாற்றிய அவர், பிறகு சோவியத் கலாச்சார மையத்தில் பணியாற்றி, ஓய்வுபெற்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இலக்கிய இதழான தாமரையின் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார் தி.க.சி.

முற்போக்குக் கொள்கைகள் சார்ந்து தனது இலக்கியச் செயல்பாடுகளை தி.க.சி. மேற்கொண்டிருந்தார்.

இளம் எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகள் பற்றி, தொடர்ந்து கடிதங்கள் எழுதி ஊக்குவிப்பதையும் பத்திரிகைகளுக்குக் கட்டுரைகள் குறித்த விமர்சனங்களையும் கருத்துகளையும் முன்வைத்து வந்தார்.

கதை, கவிதை, நாடகம், இலக்கிய விமர்சனம், திறனாய்வு எனப் பல தளங்களில் செயல்பட்ட, தி.க.சியின் "விமர்சனங்கள், மதிப்புரைகள், பேட்டிகள்" என்ற நூலுக்கு 2000வது ஆண்டின் சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது.

இவருக்கு கணபதி, கல்யாணசுந்தரம் (வண்ணதாசன்), சேது என மூன்று மகன்களும் ஜெயலட்சுமி, பர்வதகுமாரி, கௌரி என மூன்று மகள்களும் இருக்கின்றனர்.