இந்திய கம்யூனிஸ்ட் தேர்தல் அறிக்கை வெளியீடு; "தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு வேண்டும்"

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சின்னம்
Image caption இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சின்னம்

பொதுத் துறை தனியார் மயமாக்கப்பட்டுவரும் நிலையில், தனியார் துறையிலும் இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை சனிக்கிழமை காலையில் வெளியிடப்பட்டது.

அக்கட்சியின் மாநிலச் செயலர் தா. பாண்டியன், தேசியச் செயலர் டி. ராஜா, தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் நல்லக்கண்ணு ஆகியோர் இதனை வெளியிட்டனர். தேசிய அளவிலான அறிக்கை வெளியிடப்பட்டிருக்கும் நிலையில், தமிழகத்திற்கென பிரத்யேகமான அம்சங்கள் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தன.

குறிப்பாக, நதி நீர் இணைப்பு, தமிழகத்தில் லோக் ஆயுக்தா, மேம்பட்ட அரசு நிர்வாகம், அனைவருக்கும் வீடு, நீதிமன்றங்களில் தமிழ் போன்ற அம்சங்களை இந்த அறிக்கையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

தமிழகத்தின் நிரந்தப் பிரச்சனையாக குடிநீர் பிரச்சனை நீடித்துவரும் நிலையில், தென்னக நதிகளை இணைக்க வேண்டும் என்பது இந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல, இந்தியாவின் பல மாநிலங்களில் லோக் ஆயுக்தா அமைப்பு உருவாக்கப்பட்டுவிட்ட நிலையில், தமிழகத்திலும் லோக் ஆயுக்தாவை அமைக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதையும் இக்கட்சியின் அறிக்கை வலியுறுத்துகிறது.

தொடர்ச்சியான போராட்டங்களின் மூலம் பெற்ற இடஒதுக்கீட்டின் வரம்பு சுருக்கிவருவதால், தனியார் துறையிலும் இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டுமென இந்தத் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஐ.ஐ.டி.,ஐ.ஐ.எம். ஆகிய உயர் கல்வி நிறுவனங்களிலும் இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டுமென இந்தத் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.