மின்புத்தகங்களை வெளியிடும் முயற்சியில் தமிழ் எழுத்தாளர்கள்

கணினிகள், கைத்தொலைபேசிகள் அல்லாது மின் வாசிப்புக் கருவிகள் மூலமாகவும் மின்புத்தகங்களை வாசிக்க முடியும் படத்தின் காப்புரிமை AFP
Image caption கணினிகள், கைத்தொலைபேசிகள் அல்லாது மின் வாசிப்புக் கருவிகள் மூலமாகவும் மின்புத்தகங்களை வாசிக்க முடியும்.

தற்காலத் தமிழ் எழுத்தாளர்கள் சிலர் தமது படைப்புகளை மின்புத்தகங்களாக வெளியிடுவதில் ஆர்வம் காட்ட ஆரம்பித்துள்ளனர்.

இவர்களின் தமிழ் படைப்புகளை மின்புத்தகமாக வெளியிடுவதற்கு சென்னையில் இருந்து இயங்கும் www.freetamilebooks.com என்ற இணையதளம் உதவி வருகிறது.

எழுத்தாளரின் படைப்புகளை பதிப்பு நிறுவனம் ஒன்று புத்தகமாக அச்சிட்டு வெளியிட்டால் மட்டுமே அவற்றுக்கு வாசகர்கள் கிடைப்பார்கள் என்றிருந்துவந்த நிலையை மாற்றுவதாக மின்பதிப்பு வந்துள்ளது.

இந்த புதிய முறையில் எழுத்தாளர்களின் படைப்புகளை அவர்களே மின்புத்தகமாக மாற்றி தமது வலைப்பூக்களிலோ, மின் புத்தகங்களை விற்பனை செய்வதற்கான இணையதளங்களிலோ விற்பனை செய்ய முடியும்.

இந்த மின் புத்தகங்களை, கணினி, கைத்தொலைபேசி மற்றும் மின்வாசிப்புக் கருவிகள் மூலமாக வாசகர்கள் படிக்க முடியும்.

அமேஸான், கூகுள் பிளே, ஆப்பிள் ஐபுக்ஸ் போன்ற இணையவழிச் சந்தைகள் ஏற்கனவே மின்புத்தகங்களை பெரிய அளவில் விற்பனை செய்துவருகின்றன.

ஆனால் தமிழ் மொழிப் புத்தகங்கள் அவற்றில் விற்கப்படுவதில்லை காரணம் அவர்கள் விற்கும் மின்புத்தகங்களின் கோப்பு வடிவங்களுக்கு தமிழ் எழுத்துருக்கள் பொருந்துவதில்லை.

ஆனால் தமிழ் எழுத்துருக்கள் சரியாக தோன்றும் விதமான கோப்பு வடிவங்களில் இந்த இணையதளத்தில் புத்தகங்கள் விற்கப்படுகின்றன.

தவிர இணைய வழியில் பெறுகின்ற மின்புத்தகங்களை எழுத்தாளர் அனுமதிக்கின்ற விதங்களில் வாசகர்கள் பகிர்வதற்கான நெறிமுறைகளும் வகுக்கப்பட்டுள்ளன.

திறன்பேசிகளில் தொடுதிரைக் கணினிகளில் வாசிப்பதற்குரிய ePUB மற்றும் mobi கோப்பு வடிவங்களிலும், PDF கோப்பு வடிவத்திலுமாக மின்புத்தகங்கள் தற்போது வெளியிடப்பட்டு வருகின்றன.

கிழக்குப் பதிப்பகம், நியு ஹொரைஸன் மீடியா போன்ற வேறு சில நிறுவனங்களும் தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றன.

மின்பதிப்பு மூலமாக எழுத்தாளர்கள் ஏராளமான வாசகர்களை சென்றடைய முடியும் என்றாலும், மின்புத்தகங்கள் மூலமாக அவர்கள் வருமானம் ஈட்ட முடியுமா என்பது இன்னும் ஒரு கேள்விக்குறியாகவே இருக்கிறது.