'கௌரவக் கொலை'-மூவர் குற்றவாளிகள் என தீர்ப்பு

Image caption கொளரவக் கொலைகள் -- ( ஆவணப்படம்)

கடந்த 2002-ம் ஆண்டு உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடந்த கௌரவக் கொலை என்று கருதப்படும் ஒரு சம்பவத்தில் நிதிஷ் கடாரா என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான 3 பேரும் குற்றவாளிகள் என்று தில்லி உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ள மூன்று பேரில் ஒருவரான விகாஸ் யாதவ் என்பவர் உத்தரப்பிரதேச மாநிலத்தின் அரசியல்வாதியான டி.பி.யாதவின் மகன் ஆவார்.

நீதிபதிகள் கீதா மிட்டல் மற்றும் ஜே.ஆர். மிதா ஆகியோர் தலைமையிலான அமர்வு இந்தக் குற்றவாளிகளுக்கு அளிக்கப்பட வேண்டிய தண்டனை தொடர்பிலான வாதங்கள் ஏப்ரல் மாதம் 25 ஆம் தேதி அன்று நடைபெறும் என்று தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் ஏப்ரல் 16 ஆம் தேதி அன்று இந்த வழக்கின் வாதங்களை கேட்டபின் தீர்ப்பை ஒத்திவைத்த தில்லி உயர் நீதிமன்றம் ஒரு வருடத்திற்கு பிறகு இன்று இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தின் அரசியல்வாதியான டி.பி.யாதவின் மகள் பாரதி யாதவுடன் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியின் மகன் நிதிஷ் கடாரா காதல் உறவு வைத்து கொண்டிருந்ததாகவும், இது தெரியவந்தவுடன் தங்களின் கௌரவத்தை காப்பதற்காக 2002 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 16 ஆம் மற்றும் 17ஆம் தேதிகளுக்கு இடைப்பட்ட இரவில் அந்த பெண் பாரதி யாதவின் சகோதரனான விகாஸ் யாதவ் மற்றும் அவரது உறவுக்காரர்களான விஷால் மற்றும் சுக்தேவ் யாதவ் ஆகியோர் நிதிஷ் கட்டாராவை கடத்திச் சென்று கொன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2008 ஆம் ஆண்டில் விகாஸ் யாதவ் மற்றும் விஷால் யாதவ் ஆகியோரை குற்றவாளிகள் என்று தெரிவித்து அவர்களுக்கு ஆயுள் தண்டனை அளித்து விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. 2011 ஆம் ஆண்டில் சுக்தேவ் யாதவிற்கு ஆயுள் தண்டனை விதித்து விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

இந்த வழக்கில் குற்றவாளிகள் தரப்பில் விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பினை எதிர்த்து மூன்று மனுக்களும், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்குமாறு அரசு தரப்பாலும், கொல்லப்பட்டவரின் தாயார் நீலம் கடாரா சார்பிலும் இரண்டு மனுக்களும் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.

மொத்தம் இந்த 5 மனுக்களை விசாரித்த தில்லி உயர் நீதிமன்றம் குற்றவாளிகளின் மனுக்களை மேல்முறையீட்டிற்கு தகுதி அற்றவை என்று கூறி தள்ளுபடி செய்தது. அளிக்கப்பட வேண்டிய தண்டனை தொடர்பிலான வாதங்கள் ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி அன்று நடைபெறும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.