சொத்துக்குவிப்பு : நேரில் ஆஜராவதிலிருந்து ஜெயாவுக்கு நீதிமன்றம் விலக்கு

படத்தின் காப்புரிமை BBC World Service
Image caption ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு :ஏப்ரல் 5ம் தேதி ஆஜராக வேண்டும்

வருமானத்துக்கு மீறிய சொத்துக்குவிப்பு வழக்கில், தமிழக முதல்வர் ஜெயலலிதா வரும் ஏப்ரல் 5ம் தேதி நேரில் ஆஜராக வேண்டுமென்று என்று இன்று காலை கூறிய பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், தொடர்ந்து மாலையும் நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணையின் போது தானாக முன்வந்து ஜெயலலிதா நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்துள்ளது.

இந்த வழக்கில் முன்னதாக இன்று காலை தமிழக முதல்வர் ஜெயலலிதா உட்பட சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோருக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி ஜான் மைக்கல், பின்னர் தொடர்ந்த விசாரணையின் போது இவ்வாறு உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிப்பதாகவும் ஆனால் சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் கண்டிப்பாக நேரில் ஆஜராக வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

முன்னதாக காலையில், இந்த வழக்கில் , தமிழக முதல்வர் ஜெயலலிதா வரும் ஏப்ரல் 5ம் தேதி நேரில் ஆஜராக வேண்டுமென்று, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஜெயலலிதா 1991-1996ல் தமிழக முதல்வராக இருந்த போது அவரது வருமானத்துக்கும் அதிகமான சொத்துக்களை அவர் குவித்துள்ளதாகத் தொடரப்பட்டுள்ள வழக்கில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நால்வர், வரும் ஏப்ரல் 5ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

ஜெயலலிதா, சசிகலா மற்றும் இவர்கள் சார்ந்த நிறுவனங்கள் மீது நடைபெற்று வரும் இந்த வழக்கிலிருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என லெக்ஸ் மற்றும் மெடோ அக்ரோ பார்ம் ஆகிய நிறுவனங்கள் கோரி மனு தாக்கல் செய்திருந்தன.

இது தொடர்பான விசாரணை இன்று பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜான் மைக்கல் முன்பு நடைபெற்ற போது இந்த உத்தரவு வெளியானது.

லெக்ஸ் மற்றும் மெடோ அக்ரோ பார்ம் ஆகிய நிறுவனங்கள் தரப்பில் முன்னதாக தங்களை இந்த வழக்கில் இருந்து விடுவிக்கவும், மதிப்பீடு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்ப்பட்டுள்ள தங்கள் சொத்துக்களின் மதிப்பை மறுமதிப்பீடு செய்யவும், இதே நீதிமன்றத்தில் கோரிய போது அதை அப்போது நீதிமன்றம் ஏற்க மறுத்தது.

இதனையடுத்து நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் இதே கோரிக்கையை வலியுறுத்தி இவர்கள் தரப்பில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நடைபெற்றது.

அப்போது பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அவர்களது ஆணையை மறுபரிசிலினை செய்ய கூறி சென்னை உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை முன்வைத்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று லெக்ஸ் மற்றும் மெடோ அக்ரோ பார்ம் தரப்பு வழக்கறிஞர் வாதிட்ட போது, இது தொடர்பாக அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங்கிடம் நீதிபதி ஜான் மைக்கல் கேள்வி எழுப்பினார்.

இதற்கு வழக்கறிஞர் பவானி சிங் பதில் கூறிய போது, சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு தொடர்பாக தனக்கு தகவல் அளிக்கப்படவில்லை என்றார்.

பின்னர் நீதிபதி ஜான் மைக்கல் இது குறித்து குறிப்பிடுகையில், முன்னதாக பெங்களூரு உயர்நீதிமன்ற உத்தரவில் கூறியுள்ளது போல் இந்த விவகாரம் தொடர்பான அனைத்து வழக்குகளிலும், அரசு தரப்பில் வழக்கறிஞர் பவானி சிங் மட்டும் தான் ஆஜராக வேண்டும் என கூறினார். ஆனால் இந்த விவகாரம் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற போது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை பிரிவில் ஆஜராகி வாதாடியது தவறு என்றும் சுட்டிக்காட்டினார்.

ஜெயலலிதா, சசிகலா ஆகிய இருவரையும் வரும் ஏப்ரல் 5ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டார். அப்போது அவர்கள் அனைவரும் பெங்களூரு நகரத்தின் மத்தியில் அமைந்துள்ள வளாகத்தில் ஆஜராகினால் சட்ட ஒழுங்கு சீர்குலைய வாய்ப்பு உள்ளதால், பரப்பன அக்ரஹாரா நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென்று அவர் கூறினார். மேலும் அவர்கள் அப்போது ஆஜராகும் போது அதற்கு தேவையான பாதுக்காப்பு ஏற்பாடுகளை கர்நாடக மாநில அரசு காவல் துறையை கொண்டு மேற்கொள்ள வேண்டும் என்றார்.