தேர்தல் ஆணையக் கெடுபிடிகளுக்கு எதிராக வழக்கு: ஜெயலலிதா

Image caption தேர்தல் ஆணையக் கெடுபிடிகளுக்கு எதிராக வழக்கு - ஜெயலலிதா எச்சரிக்கை ( நாமக்கல் கூட்டத்தில் ஜெயலலிதா)

தேர்தல் பிரச்சார முறைகளில் தேர்தல் ஆணையம் கடும் கட்டுப்பாடுகளை விதித்திருப்பது குறித்து வழக்குத் தொடரப்படும் என தமிழக முதலமைச்சரும் அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதா கூறியுள்ளார்.

இன்று நாமக்கல்லில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட ஜெயலலிதா, அந்தக் கூட்டத்தில் பேசும்போது, “கட்சியின் தலைவர் அல்லது நட்சத்திரப் பேச்சாளர் பேசும் கூட்டத்தின் மேடையில் வேட்பாளர் இருந்தாலோ, அவரது பெயரோ புகைப்படமோ இருந்தாலோ அவரது பெயரை உச்சரித்தாலோ கூட்டத்திற்கு ஏற்பட்டதாக கருதப்படும் செலவு அனைத்தும் வேட்பாளர் கணக்கில் சேர்க்கப்படும் என்ற தேர்தல் ஆணையத்தின் உத்தரவு நியாயமற்றது என்றார்.

பொதுமக்கள் தாங்களாகவே தங்களது சொந்த செலவில் வாகனங்களில் வந்தாலும், அந்தச் செலவு வேட்பாளர் கணக்கில் சேர்க்கப்படும் என்பது எப்படி நியாயமாகும்?” என்று கேள்வியெழுப்பினார்.

தேர்தல் என்று வந்துவிட்டாலே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் செயல்பாட்டை முற்றிலும் ஸ்தம்பிக்க வைக்கும் வகையில் பல்வேறு ஆணைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டு வருகிறது என்று அவர் குற்றம் சாட்டினார்.

வேட்பாளர் பெயரைக் கூட உச்சரிக்கக் கூடாதென்றும், இத்தொகுதி வேட்பாளர் என்று கூட சொல்லக்கூடாது என்றும் தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ளது ஜனநாயகத்தை கேலிக்கூத்து ஆக்குவதாகும் என்றும் ஜெயலலிதா விமர்சித்தார். இது தொடர்பாக வழக்கு தொடரப்படும் என்றும் தனது உரையில் அவர் குறிப்பிட்டார்.

ஆனால், இந்த விதிமுறைகள் நீண்ட காலமாகவே அமலில் இருப்பவை என்றும் புதிதாக தாங்கள் எதையும் அமல்படுத்தவில்லை என்றும் தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். நட்சத்திர பேச்சாளரோ, முக்கியத் தலைவரோ கூட்டத்தில் பங்கேற்றால், பொதுக்கூட்டத்திற்கான செலவு மட்டுமே வேட்பாளர் கணக்கில் சேர்க்கப்படும் என்றும் அந்த தலைவரின் பயணச் செலவு வேட்பாளரின் கணக்கில் சேர்க்கப்படமாட்டாது என்றும் அவர் தெரிவித்தார்.