தேர்தல்: வேட்புமனுத் தாக்கலில் விறுவிறுப்பு

இந்திய நாடாளுமன்ற தேர்தலுக்கு தமிழகத்தில் ஏப்ரல் 24ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்கவுள்ளது. படத்தின் காப்புரிமை AFP
Image caption இந்திய நாடாளுமன்ற தேர்தலுக்கு தமிழகத்தில் ஏப்ரல் 24ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்கவுள்ளது.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 24ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்கவிருக்கும் நிலையில், வேட்புமனுத் தாக்கல் விறுவிறுப்படைந்துள்ளது.

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் மார்ச் மாதம் 29ஆம் தேதியன்று துவங்கியது.

வேட்புமனுக்களை ஏப்ரல் ஐந்தாம் தேதி மதியம் 3 மணி வரை தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி, தென் சென்னைத் தொகுதிக்கு இன்னும் அதிகார பூர்வ வேட்பாளரை அறிவிக்கவில்லை.

அதேபோல, இடைத் தேர்தல் நடைபெறும் ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும் தனது வேட்பாளரை இதுவரை அறிவிக்கவில்லை. இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பி.எஸ். ஞானதேசிகனிடம் கேட்டபோது வெள்ளிக்கிழமை இரவோ, சனிக்கிழமையோ வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார்.

தமிழகத்தில் காங்கிரஸ் வேட்பாளர்கள் இவ்வளவு சீக்கிரம் அறிவிக்கப்பட்டது இதுதான் முதல் முறை என்றும், தென் சென்னை தொகுதியில் வேட்பாளர் இதுவரை அறிவிக்கப்படாததற்குக் காரணம் இருப்பதாகவும் அந்தக் காரணத்தை சனிக்கிழமை தெரிவிக்கவிருப்பதாகவும் அவர் கூறினார்.

வேட்புமனுத் தாக்கல் முடிவடைவதற்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே எஞ்சியிருக்கும் நிலையில், தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் சேர்த்து இதுவரை 758 பேர் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.

கடந்த நான்கு நாட்களில் இதுவரை 457 பேர் மட்டுமே வேட்புமனுக்களைத் தாக்கல் செய்திருந்த நிலையில், வெள்ளியன்று உச்சகட்டமாக 301 வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், தி.மு.க.வின் டி.ஆர். பாலு, பொங்கலூர் பழனிச்சாமி, தே.மு.தி.கவின் சுதீஷ், காங்கிரசைச் சேர்ந்த ஜே.என். ஆரூண், ஜோதிமணி, பாரதீய ஜனதாக் கட்சியின் சி.பி. ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் தங்களது வேட்புமனுக்களை இன்று தாக்கல் செய்தனர்.