வாரணாசியில் மோடியை எதிர்த்து மோதும் காங்கிரஸ் வேட்பாளர் அஜயராய்

அஜய் ராய் படத்தின் காப்புரிமை PTI
Image caption அஜய் ராய்

எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலில் பாஜக பிரதமர் வேட்பாளரான நரேந்திரமோடியை எதிர்த்து உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் இருந்து போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளராக அஜய்ராயை அக்கட்சி அறிவித்துள்ளது.

இந்த வாரணாசி தொகுதியில் பாஜக பிரதமர் வேட்பாளரை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால் போட்டியிடுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனாலும் அவர் இன்னும் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்யவில்லை.

இந்நிலையில் அந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் வலுவான வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்பதால், காங்கிரஸ் கட்சியின் வாராணாசிக்கான வேட்பாளர் அறிவிப்பு தாமதமாகி வந்தது.

இந்நிலையில் செவ்வாயன்று வாரணாசி தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளராக அஜய்ராய் என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

1996ஆம் ஆண்டில் நடந்த உத்திர பிரதேச மாநிலத்தின் சட்டமன்ற தேர்தலில் அஜய்ராய் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

அம்மாநில சட்டமன்றத்தில் வாரணாசியில் உள்ள பிந்திரா தொகுதி உறுப்பினராக காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்தெடுக்கப்பட்டு அவர் பதவி வகிக்கிறார்.

2009ஆம் ஆண்டின் பொது தேர்தலில் வாராணாசி தொகுதியில் பாஜகவின் முரளி மனோஹர் ஜோஷியை எதிர்த்து போட்டியிட்டு அவர் தோல்வி அடைந்திருந்தார்.

கங்கைக் கரையில் அமைந்திருக்கும் வாரணாசி இந்து சமயத்தினரின் புனித நகரமாக கருதப்படுகிறது.

இந்நிலையில் இந்துத்துவா கொள்கைகளை ஆதரிக்கும் கட்சியான பாஜகவிற்கு அந்த தொகுதியில் வெற்றி வாய்ப்பு அதிகம் என்று பாஜக கட்சியினர் தெரிவித்து வருகின்றனர்.