தான் திருமணமானவர் என்பதை பகிரங்கப்படுத்தினார் மோடி

  • 10 ஏப்ரல் 2014
நரேந்திர மோடி படத்தின் காப்புரிமை AFP
Image caption நரேந்திர மோடி

பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி முதல் முறையாக, தான் திருமணமானவர் என்பதை வெளிப்படியாக ஒப்புக்கொண்டுள்ளார். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டிடுவதற்காக அவர் தாக்கல் செய்த மனுவிலேயே தனது மனைவி தொடர்பான தகவல்களை முதல் முறையாக, அதிகாரப்பூர்வமாக, பகிரங்கமாக பதிவு செய்திருக்கிறார்.

குஜராத் முதல்வராக 13 ஆண்டுகளாக பதவியில் இருக்கும் நரேந்திர மோடி, இதுவரை தான் போட்டியிட்ட எந்தத் தேர்தலின் போதும் தனது குடும்பப் பின்னணி குறித்த விவரத்தை தெளிவுப்படுத்தியது இல்லை. தற்போது நடைபெறும் மக்களவை தேர்தலுக்காக, குஜராத் மாநிலத்தில் உள்ள வதோர தொகுதியில் நேற்று வியாழக்கிழமை அவர் வேட்புமனுவை தாக்கல் செய்தபோது தனக்கு திருமணமான விவரத்தை தெரிவித்துள்ளார்.

தனது வேட்புமனுவுடன் அவர் தாக்கல் செய்துள்ள படிவத்தில், அவரது மனைவின் பெயர் ஜசோதாபென் என்று குறிப்பிட்டு உறுதிச் சான்று அளித்துள்ளார். ஆனால் விதிமுறைப்படி இவ்வாறு மனைவியின் பெயரை குறிப்பிடும் போது அவர் சார்ந்த சொத்து விவரங்களையும் சேர்த்து அளிக்க வேண்டியது கட்டாயம் என்று சட்டம் கூறும் போதும், அது குறித்த விவரங்கள் தனக்கு தெரியாது என்று மோடி அந்த விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மனைவி பற்றி இதுவரை மவுனம் காத்த மோடி

தொடர்ந்து மூன்று முறையாக குஜராத் மாநிலத்தின் முதல்வராக தற்போது வரை நீடிக்கும் மோடி, இதுவரை தேர்தலில் போட்டியிடுவதற்காக ஒவ்வொரு முறையும் வேட்புமனுவை தாக்கல் செய்த போதும், தனக்கு திருமணம் ஆனது என்கிற விவரத்தை அளிக்காமல் அதற்கான பகுதியை காலியாகவே விட்டு வைத்துள்ளார்.

முன்னதாக நரேந்திர மோடியின் மனைவி ஜசோதாபென், குஜராத் மாநிலத்தில் வசித்து வருவதாக அவ்வப்போது சில செய்திகள் இந்திய ஊடகங்களில் வெளியானதை அடுத்து காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகளின் தலைவர்கள், இந்த முறை நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிட வேட்புமனுவை தாக்கல் செய்யும் போது தனது மனைவி குறித்த விவரங்களை தெளிவுப்படுத்த வேண்டும் என்று கோரி வந்தனர்.

படத்தின் காப்புரிமை Getty
Image caption மோடியின் வெளித்தோற்றம் முகமூடியே என்று எதிர்கட்சிகள் விமர்சனம்

இதனையடுத்து தற்போது நரேந்திர மோடி, தனது வேட்புமனுவை தாக்கல் செய்யும் போது அளித்துள்ள உறுதி மொழியில் தனக்கு திருமணமான விவரத்தை தெளிவுப்படுதியுள்ள போதும், அவர் மனைவி சார்ந்த சொத்து விவாகாரத்தை அவர் அளிக்காதது புதிய சர்ச்சையை உருவாக்க வாய்ப்பு உள்ளதாக சட்டவல்லுனர்கள் கருதுகின்றார்கள்.

இந்நிலையில் இது தொடர்பாக இன்று விளக்கம் அளித்துள்ள நரேந்திர மோடியின் சகோதரர் சோமாபாய் மோடி, ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பாக அவரது ஒப்புதல் இல்லாமல் நடைபெற்ற சம்பராதய ரீதியிலான திருமணம் அது என்று குறிப்பிட்டுள்ளார். அந்த திருமணம் நடந்த சிலநாட்களிலேயே மோடி தனது வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாகவும், அதற்குப்பிறகு மனைவி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் யாருடனும் மோடி தொடர்பு கொள்வது இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

தேசத்திற்காக சேவை செய்வது என்பதை மட்டுமே தனது குறிக்கோளாக கொண்டவர் மோடி என்று கூறியுள்ள அவரது சகோதரர், தங்களது பெற்றோர் படிக்காத ஏழைகள் என்பதாலும், ஐம்பது ஆண்டுகளுக்கு முந்தைய வாழ்க்கை முறையில், இது போன்று நிர்பந்த நிகழ்வுகள் சம்பிரதாய வாழ்க்கையாக மட்டும் பார்க்கப்பட்டதாலும் இந்த திருமணம் நடத்தப்பட்டது என்றும் நரேந்திர மோடியின் சகோதரர் தெரிவித்துள்ளார். திருமணம் முடிந்தஉடன் நரேந்திர மோடி தமது வீட்டை விட்டு வெளியேறி விட்டதால், ஜசோதாபென் அவரது பெற்றோர்களுடன் சென்று தங்கி தனது படிப்பை தொடர்ந்தார் என்ற தகவலையும் அவர் தெரிவித்திருக்கிறார்.

பெண்ணியவாதிகள் விமர்சனம்

பாஜகவின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி தன் மனைவியை நடத்தியிருக்கும் விதம், பாஜக போற்றும் காவியநாயகன் ராமர் தன் நிறைமாத கர்ப்பிணி மனைவி சீதையை காட்டுக்கனுப்பிய செயலைப் போன்றது என்கிறார் மனித உரிமை செயற்பாட்டாளர் வழக்கறிஞர் சுதாராமலிங்கம்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை