நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவிகளின் எண்ணிக்கையில் குழப்பம்

மாணவிகள் கடத்தப்பட்ட பள்ளிக்கூடம் படத்தின் காப்புரிமை b
Image caption மாணவிகள் கடத்தப்பட்ட பள்ளிக்கூடம்

நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதியில் ஒதுக்குபுறமாகவுள்ள ஒரு தங்கிப் படிக்கும் பள்ளியிலிருந்து கடந்த திடங்கட்கிழச்மை கடும்போக்கு இஸ்லாமியவாதிகள் என்று சந்தேகிக்கப்படுபவர்களால் கொண்டுசெல்லப்பட்டிருந்த பதின்ம வயதுப் யுவதிகளின் எண்ணிக்கை தொடர்பில் தொடர்ந்து குழப்பம் நிலவி வருகிறது.

கடத்தப்பட்டிருந்த யுவதிகளில் பெரும்பான்மையானோர் விடுவிக்கப்பட்டுவிட்டார்கள் என நைஜீரியாவின் இராணுவம் முன்னதாக வெளியிட்டிருந்த அறிவிப்பை தற்போது அது வாபஸ் பெற்றுள்ளது.

நைஜீரியாவின் போர்னோ மாநிலத்தில் தொலைதூரத்திலுள்ள சிபொக் என்ற ஊரிலுள்ள பள்ளிக்கூடத்தில் திங்கட்கிழமை இரவு துப்பாக்கிதாரிகள் அதிரடியாக நுழைந்து அங்கிருந்த உணவுப் பொருட்களை திருடிக்கொண்டு, அங்கு தங்கிப்படித்துவந்த மாணவிகளை லாரிகளில் அள்ளிப்போட்டுக்கொண்டு சென்றதாக தெரிவிக்கப்பட்டது.

யுவதிகளைக் கடத்திச் சென்ற பயங்கரவாதிகள் என நம்பப்படுபவர்கள் பதுங்கியிருந்த இடத்தை துருப்பினர் சுற்றிவளைத்துவிட்டதால், கடத்தப்பட்ட மாணவிகளில் பெரும்பான்மையானோர் விடுவிக்கப்பட்டுவிட்டார்கள் என கடந்த புதன்கிழமை இராணுவம் கூறியிருந்தது.

ஆனால் தனது முந்தைய அறிவிப்பை வாபஸ் பெறுவதாக இராணுவம் ஒப்புக்கொண்டுள்ளது.

கடத்தப்பட்டிருந்த மாணவிகளில் மொத்தம் 44 பேர்தான் தப்பித்து வெளியேறியிருக்கிறார்களே தவிர வேறு 85 பேரின் கதி பற்றி இன்னும் தெரியவராமலேயே உள்ளது என போர்னோ மாகாண கல்வித்துறை தெரிவித்துள்ளது.

ஆனால் கடத்தப்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள் சிலரோ 150 முதல் 200 பேர் வரையானோரின் கதி பற்றி இன்னும் தெரியவராமலேயே உள்ளது என்கின்றனர்.

காட்டில் தேடப்போன பெற்றோர்

மாணவிகளின் பெற்றோர்கள் சிலர் தமது பிள்ளைகள் பிடித்துவைக்கப்பட்டிருப்பதாக நம்பப்படும் சாம்பிஸா காடுகளுக்குள் கடந்த வியாழனன்று சென்று தேடவும் செய்திருந்தனர்.

அது ஆபத்தான இடமாக இருந்ததால், இருட்ட ஆரம்பித்தவுடன் தேடச்சென்றவர்கள் பலர் திரும்பிவிட்டதாக தேடப்போன தந்தை ஒருவர் பிபிசியிடம் கூறியிருந்தார்.

போக்கோ ஹராம் ஆயுததாரிகளின் முகாம்களாக இருக்கக்கூடிய இடங்களைத் தான் கண்டதாகவும், அருகே கார்களும், மோட்டார் சைக்கிள்களும், ஆழ்துளைக் கிணறுகளையும் தான் கண்டதாக அவர் தெரிவித்தார்.

ஆனால் காட்டில் தான் சந்தித்தவர்கள், மாணவிகள் கடத்தப்பட்டது பற்றி தமக்கு ஒன்றும் தெரியாது என்று கூறியதாக அத்தந்தை குறிப்பிட்டார்.

தப்பிய மாணவிகள்

இதனிடையே கடத்தப்டப்பட்ட மாணவிகளுடைய பள்ளிக்கூடத் தலைமையாசிரியை பிபிசியிடம் தகவல் தருகையில், கடத்தப்பட்ட வேளையில் வாகனத்திலிருந்து குதித்தும், கடத்தலாளிகள் சமைத்துக்கொண்டிருந்த நேரத்திலும் அவர்கள் தொழுகைக்கு சென்ற நேரத்திலும் மாணவிகள் சிலர் தப்பி வந்துள்ளார்கள் என்றும், கடத்தல்காரர்கள் தம்மைத் துன்புறுத்துள்ளவில்லை என்று கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

சிக்குண்ட மாணவிகளைக் காப்பாற்ற அரசாங்கம் கூடுதலாக முயல வேண்டும் என்று தலைமையாசிரியை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கல்வி

இந்த மாணவிகளை கடத்தியதாக கருதப்படும் போக்கோ ஹராம் கடும்போக்கு இஸ்லாமியவாத ஆயுதக் குழுவினர் இந்த வருடத்தில் நூற்றுக்கணக்கான சிவிலியன்களை கொன்றுள்ளனர்.

"போக்கோ ஹராம்" என்றால் மேற்குலக் கல்வி இஸ்லாத்தால் தடைசெய்யப்பட்டுள்ளது என்று பொருள்.

கல்வி நிறுவனங்களை இலக்குவைத்து தாக்குதல் நடத்துவதென்பதை அவ்வமைப்பினர் அவ்வப்போது மேற்கொண்டு வந்துள்ளனர்.