சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை

பட்டாசு தொழில்துறை மையமாக சிவகாசி இருந்துவருகிறது.
Image caption பட்டாசு தொழில்துறை மையமாக சிவகாசி இருந்துவருகிறது.

சீனாவிலிருந்து இந்தியாவுக்கு சட்டவிரோதமான முறையில் பட்டாசுகள் இறக்குமதி ஆவதை தடுப்பது, பட்டாசு தயாரிப்பு உரிமத்துக்கான ஆண்டுக் கட்டணத்தை உயர்த்தாமல் இருப்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளோடு தமிழ்நாடு பட்டாசு மற்றும் வெடிப்பொருள் தயாரிப்பாளர் சங்கத்தினர் தில்லியில் மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகளைச் சந்தித்துள்ளனர்.

மத்திய அரசின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில், தமிழ்நாடு பட்டாசு மற்றும் வெடிமருந்து தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இத்தொழில் ஈடுபடும் தயாரிப்பாளர்களின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

அப்போது தங்களது முக்கிய கோரிக்கையாக, சீனா நாட்டிலிருந்து பட்டாசுகளை சட்ட விரோதமாக இந்தியாவுக்கு இறக்குமதி செய்வதை தடுத்து நிறுத்த வலுவான நடவடிக்கை எடுக்க கோரினர்.

மேலும் பட்டாசு தயாரிப்பு உரிமைக்கான ஆண்டுக்கட்டணத்தை 15 ஆயிரத்திலிருந்து 4 லட்சமாக உயர்த்துவதென்பதை ரத்து செய்யவும் வேண்டினர்.

பட்டாசு தொழிற்சாலைகளில் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்வதாக கூறி அதிகப்படியான நிபந்தனைகளை விதிப்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று அவர்கள் கூறினார்கள்.

ஏற்கனவே பட்டாசு தயாரிப்பு தொழிற்சாலைகள் நலிவடைந்துவரும் சூழலில், இது போன்ற விவகாரங்கள் எதிர்கொள்ள முடியாத சவால்களாக அமைந்துள்ளதாகவும், இந்த தொழிலில் வளர்ச்சி காண்பதற்காகவே இத்தகைய கோரிக்கைகளை முன்வைப்பதாகவும் எடுத்து உரைத்தனர்.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6ம் தேதி முதல் தொடர்ந்து 11 நாட்கள் பல்வேறு விதமான போராட்டங்களில் ஈடுப்பட்டு வந்த இவர்கள், அதை தீவிர படுத்தும் நோக்கத்தில் ஏப்ரல் 15ஆம் தேதி சிவகாசியில் கடையடைப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கினர்.

இவர்களுக்கு அனைத்து வணிக சங்க அமைப்புகளும் ஆதரவு தெரிவித்து வந்த சூழலில், மத்திய அரசு இவர்களை போராட்டத்தை கைவிடுமாறு கூறியதோடு, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிளிடம் பேச்சுவார்த்தை நடத்திட அழைப்பு விடுத்தனர்.

இதனையடுத்து ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்திய தமிழ்நாடு பட்டாசு மற்றும் வெடிமருந்து தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைத்து இந்த பேச்சுவார்த்தையை தற்போது துவங்கியுள்ளனர்.

நடைபெற்ற கூட்டத்திற்கு பிறகு பிபிசி தமிழோசையிடம் பேசிய தமிழ்நாடு பட்டாசு மற்றும் வெடிமருந்து தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் செல்வராஜ், இன்றைய பேச்சுவார்த்தையில் தாங்கள் நிறைவான முடிவுகளை எட்ட முடியாத சூழலில் இருந்தாலும் இது ஒரு நல்ல ஆரம்பமாக அமைந்துள்ளதாக கூறினார்.