பிபிசி தமிழ்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

தேர்தல் பிரச்சாரம் முடியும்போது 144 தடை கொண்டுவரப்படுவது ஏன்?

படத்தின் காப்புரிமை eci.nic.in

தமிழகத்தில் வாக்குப்பதிவு வியாழனன்று நடக்கவுள்ள நிலையில், மாநிலத்தில் பிரச்சாரம் செவ்வாய்க்கிழமை மாலையுடன் ஓய்ந்தது.

இந்த நிலையில் மாநிலம் முழுவதும் தடையுத்தரவை பிறப்பிக்க தேர்தல் ஆணையத்தின் தமிழக அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இந்த உத்தரவு ஜனநாயக நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் தன்மை வாய்ந்தது என்று மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு தெரிவித்திருப்பதாகச் செய்திகள் கூறின.

இந்த உத்தரவைப் பிறப்பிக்க தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை, ஆனால் இது ஒரு அறிவுறுத்தல் என்று வைத்துக்கொள்ளலாம் என்று இந்தியாவின் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் என்.கோபால்சாமி கூறுகிறார்.

இந்த உத்தரவைப் பிறப்பிக்க என்ன தேவை இருக்கிறது, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலை குலைந்துவிட்டதாக ஒன்றும் தகவல் இல்லையே என்று கேட்டற்குப் பதிலளித்த கோபால்சாமி, வாக்குப்பதிவு நடக்க இன்னும் 36 மணிநேரமே இருக்கும் நிலையில், வீடு வீடாக வாக்களார்களை சந்திக்க பல்வேறு கட்சிகளின் தொண்டர்கள் செல்லும்போது அவர்களிடையேயோ , அல்லது அவர்களுக்கும் வாக்காளர்களுக்குமிடையேயொ பிரச்சினைகள் ஏற்படலாம் என்றார்.

ஆனால் இது வாக்காளர்களை ஐந்து பேர்களுக்கும் குறைவான குழுக்களாக கட்சித் தொண்டர்கள் சென்று சந்திப்பதை தடுக்காது என்றும் கோபால்சாமி கூறினார்.

இந்த உத்தரவு, ஜனநாயக நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தாது, போலிசார் இதைத் தவறாகப் பயன்படுத்துவதைக் கண்காணிக்க ஊடகங்கள் இருக்கின்றன என்றும் அவர் கூறினார்.