பொறுப்பற்ற பேச்சுக்களை நான் ஏற்கவில்லை : நரேந்திர மோடி

நரேந்திர மோடி படத்தின் காப்புரிமை PTI
Image caption நரேந்திர மோடி

பாஜக தலைவர்கள் சிலர் சமீபத்தில் பொது மேடைகளில் முஸ்லிம்களுக்கு எதிராக தெரிவித்து வரும் கருத்துகளை தான் ஏற்கவில்லை என்று பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

‘பாஜகவின் நலன் விரும்பிகள் என்று கூறிக்கொள்பவர்களின் அற்பத்தனமான கருத்துக்கள் பிரச்சாரங்களை வளர்ச்சி மற்றும் நல்லாட்சி போன்ற விஷயங்களிலிருந்து திசை திருப்புகிறது”’ என்று நரேந்திர மோடி தனது டுவிட்டர் கணக்கில் தெரிவித்துள்ளார்.

மேலும் அத்தகையான பொறுப்பற்ற பேச்சுகளை தான் அங்கீகரிக்கவில்லை என்று தெரிவித்துள்ள நரேந்திர மோடி, அவ்வாறு பேசுபவர்கள் அது போன்ற கருத்துக்களை வெளியிடுவதை நிறுத்திக்கொள்ளுமாறு கேட்டு கொண்டுள்ளார்.

இந்தியாவில், முஸ்லீம்கள், இந்துக்கள் வசிக்கும் பகுதிகளில் வீடுகளை வாங்க அனுமதிக்க்கூடாது என்று விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் பிரவீன் தொகாடியா கடந்த சனிக்கிழமையன்று தெரிவித்திருந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியது.

பாஜகவின் முன்னாள் அமைச்சரும், மக்களவை வேட்பாளருமான கிரிராஜ்சிங்கும் சனிக்கிழமையன்று ஜார்கண்டில் ஒரு பிரச்சாரத்தில் ‘மோடியை எதிர்ப்பவர்களுக்கு இந்தியாவில் இடம் இல்லை’ என்றும் ‘அவர்கள் பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டும்’ என்றும் தெரிவித்த கருத்த மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இவ்வாறு சர்ச்சைகளை உருவாக்கிய கருத்துக்கள் தொடர்பில் பாஜக பதிலளிக்காமல் இருந்தது கடும் விமர்சனங்களை எழுப்பியிருந்த நிலையில் பாஜக தலைவர் நரேந்திர மோடி தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.

Image caption பிரவீன் குமார் தொகாடியா

அவர் இந்த தலைவர்களின் பெயர்களை குறிப்பிடவில்லை என்றாலும் மோடியின் கருத்து பிரவீன் தொகாடியா மற்றும் கிரிராஜ்சிங் ஆகியோர்களை குறிக்கும் வகையில் அமைந்துள்ளது. பாஜக தலைவர்கள் பிரச்சாரத்தில் மிகுந்த கட்டுப்பாட்டுடன் கருத்துக்களை தெரிவிக்குமாறு நேற்று பாஜக தலைவர் அருண் ஜேட்லியும் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில் இன்று காங்கிரஸ் கட்சி மீது தேர்தல் ஆணையத்திடம் பாஜக புகார் ஒன்றை அளித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பாஜக கட்சியின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடிக்கு எதிராக தவறான முறையற்ற வார்த்தைகளை பயன்படுத்துவதாகவும், இது தொடர்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளதாகவும் பாஜக தலைவர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்.

பாஜக மற்றும் நரேந்திர மோடியின் பெயரை கெடுப்பதற்கான காங்கிரஸ் கட்சியின் சூழ்ச்சி இது என்று அவர் தெரிவித்தார்.