நீதிமன்றங்களில் ராமதாஸ், பொன்முடி,வேலு ஆஜர்

Image caption நீதிமன்றத்தில் ராமதாஸ் ஆஜர்

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் தலைவர் ராமதாஸ், முன்னாள் அமைச்சர் பொன்முடி, எ.வ. வேலு ஆகியோர் வெவ்வேறு வழக்குகளில் இன்று நீதிமன்றங்களில் ஆஜராகியுள்ளனர்.

மாமல்லபுரத்தில் 2013ஆம் ஆண்டு நடந்த சித்திரைப் பெருவிழாவில் ஜாதி உணர்வைத் தூண்டும் வகையில் பேசியதாகக் குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் செங்கல்பட்டு முதன்மை நீதிமன்றத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் இன்று நேரில் ஆஜரானார்.

கடந்த ஆண்டு ஏப்ரல் 25ஆம் தேதி மகாபலிபுரத்தில் நடந்த சித்திரைப் பெருவிழாவில் ஜாதி உணர்வைத் தூண்டும் வகையில் பேசினார் என்றும், பத்து மணிக்குப் பிறகும் ஒலிபெருக்கி பயன்படுத்தப்பட்டது என்றும் காவல்துறை வழக்குப் பதிவுசெய்திருந்தது.

இந்த வழக்கில் ராமதாஸுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கிய நீதிமன்றம், ஒரு வாரத்திற்கு அவர் திருக்கழுக்குன்றம் நீதிமன்றத்தில் ஆஜராகி அவர் கையெழுத்திட வேண்டுமென உத்தரவிட்டது.

இந்த நிபந்தனையைத் தளர்த்த வேண்டுமென ராமதாஸ் சார்பில் உயர் நீதிமன்றத்தில் ராமதாஸ் சார்பில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் செங்கல்பட்டு முதன்மை நீதிமன்றத்தில் ஒரு நாளாவது ஆஜராகி கையெழுத்திட வேண்டுமென உத்தரவிட்டது. அந்த உத்தரவை செயல்படுத்தும் விதமாக இன்று செங்கல்பட்டு முதன்மை நீதிமன்றத்தில் நீதிபதி மகாலட்சுமி முன்பு ஆஜராகி ராமதாஸ் கையெழுத்திட்டார்.

அதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், நீதித்துறை சட்டங்களில் மாற்றங்கள் தேவை எனத் தெரிவித்தார்.

சொத்துக்குவிப்பு வழக்குகளில் பொன்முடி, வேலு

திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 2002ம் ஆண்டிலும் 2011ஆம் ஆண்டிலும் இரு வேறு வழக்குகள் பதிவுசெய்யப்பட்டிருந்தன.

இந்த வழக்குகளுக்காக முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் விழுப்புரம் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.

இந்த இரண்டு வழக்குகளையும் விசாரித்த நீதிபதி சுந்தரமூர்த்தி அவற்றை ஜூன் 12-ந்தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

இது தவிர, பூத்துறை என்ற இடத்தில் செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக மணல் அள்ளி அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் பொன்முடி உள்பட 7 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறை வழக்குத் தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கிலும் விழுப்புரம் முதன்மை நீதித்துறை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார் பொன்முடி. அந்த வழக்கும் ஜூன் 12-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலு மீது தொடரப்பட்டிருந்த சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மற்றும் அவரது மனைவி ஜீவாவேலு ஆகியோர் இன்று காலை திருவண்ணாமலை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி குருமூர்த்தி முன்னிலையில் ஆஜராகினர். இந்த வழக்கு வரும் 13ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.