2ஜி வழக்கு விசாரணை: ராசா, கனிமொழிக்கு சம்மன் குறித்து மே 2 முடிவு

  • 30 ஏப்ரல் 2014
Image caption அலைக்கற்றை வழக்கு : சம்மன் குறித்து மே 2ம் தேதி முடிவு

முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, தி.மு.க. கட்சியின் தலைவர் மு.கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் உள்ளிட்டோருக்கு எதிராக மத்திய அமலாக்கப் பிரிவு தாக்கல் செய்துள்ள குற்றப் பத்திரிக்கை மீதான விசாரணை மே மாதம் 2ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ், மத்திய அமலாக்கப் பிரிவு தாக்கல் செய்துள்ள குற்றப் பத்திரிக்கை மீதான விசாரணையில் இவர்களுக்கு சம்மன் அளிக்கப்படுவது தொடர்பில் மே மாதம் 2ம் தேதி நடைபெறும் விசாரணையின் போது முடிவு எடுக்கப்படும் என்று இன்று புதன்கிழமை சிறப்பு சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஒ.பி.சாய்னி தெரிவித்தார்.

முன்னதாக மத்திய அமலாக்கப் பிரிவு தரப்பில் இன்று நடைபெற்ற விசாரணையின் போது வாதாடிய வழக்கறிஞர் ராஜசேகர், கலைஞர் தொலைகாட்சியில் 60% பங்குகளை வைத்திருக்கும் தயாளு அம்மாள் மற்றும் கலைஞர் டிவியின் நிர்வாகி அமிர்தம் ஆகியோர் உட்பட மற்ற சில நிறுவனங்கள் மீதும் குற்றம் சுமத்த தேவையான காரணங்களைக் கூறி விளக்கம் அளித்தார்.

2ஜி எனப்படும் இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, ஸ்வான் டெலிகாம் நிறுவனம் கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ.200 கோடி வரை நிதி வழங்கியுள்ளது என்று சிபிஐ எழுப்பிய குற்றச்சாட்டுக்கு கலைஞர் தொலைகாட்சி தரப்பு மறுப்பு தெரிவித்திருந்தது.

இது தொடர்பில் கலைஞர் தொலைக்காட்சி நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், டி. பி. குரூப் நிறுவனமான சினியூக் பிலிம்ஸிடமிருந்து பங்குகள் பரிவர்த்தனைக்காக 214 கோடி ரூபாய் முன்பணமாகப் பெறப்பட்டதாகவும், ஆனால் பங்கு விலையை நிர்ணயிப்பதில் ஏற்பட்ட முரண்பாட்டால் அந்தத் தொகை, வட்டியுடன் திருப்பித் தரப்பட்டுவிட்டதாகவும், அது வருமான வரித்துறைக்கும் தெரியும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஏற்கனவே ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோரின் வாக்குமூலம் வரும் மே மாதம் 5ஆம் தேதி பதிவு செய்யப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நடைபெறவுள்ள அந்த வாக்குமூலப் பதிவின் போது அவர்கள் அனைவரும் 824 பக்கங்களில் உள்ள 1,718 கேள்விகளுக்கு பதிலளிக்க உள்ளனர்.