இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் 7ம் கட்ட வாக்குப்பதிவு

Image caption காஷ்மீரில் இன்று நடந்த வாக்குப்பதிவு

இந்தியாவில் முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் போட்டியிடும் சில மக்களவை தொகுதிகள் உள்ளிட்ட 89 தொகுதிகளில் இன்று புதன்கிழமை ஏழாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் சரத் யாதவ், தெலுங்கான ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவ், ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பாருக் அப்துல்லா உள்ளிட்ட கட்சியின் தலைவர்கள் வேட்பாளர்களாக போட்டியிடும் தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

ஏழு மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களில் நடைபெற்று வரும் இந்த ஏழாம் கட்ட வாக்குப்பதிவில் இன்று குஜராத் மாநிலத்தில் மொத்தம் உள்ள 26 தொகுதிகளிலும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

அதில் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளரான குஜராத் முதல்வர் நரேந்திர மோடி போட்டியிடும் இரண்டு தொகுதிகளில் ஒன்றான வதோரா மக்களவை தொகுதியும் அடங்கும்.

இன்று நடைபெறும் வாக்குப்பதிவில் காலை அகமதாபாத் காந்தி நகர் தொகுதியில் வாக்களித்த நரேந்திர மோடி, பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது அனைத்து மக்களும் ஒற்றுமையுடன் ஜனநாயக கடமையை ஆற்றி நாட்டின் வளர்ச்சிக்கு வித்திட வேண்டினார்.

ஆந்திர மாநிலத்தை இரண்டாக பிரித்து தெலுங்கான தனி மாநிலம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியான பிறகு நடைபெறும் முதல் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவும் இன்று தெலுங்கான பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

இரண்டு கட்டங்களாக அங்கு நடைபெறும் இந்த வாக்குப்பதிவில் மொத்தம் உள்ள 42 தொகுதிகளில் முதல் கட்டமாக இன்று 17 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

தெலுங்கான ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா அக்கட்சியின் வேட்பாளராக இன்று வாக்குப்பதிவு நடைபெறும் மெடாக் தொகுதியில் போட்டியிடுகிறார்.

இதேசமயம் ஆந்திர மாநிலத்தில் உள்ள தெலுங்கானா பகுதியில் அமைந்துள்ள 19 சட்டமன்ற தொகுதிகளிலும் இன்று வாக்குப்பதிவு மேற்கொள்ளப்படுகிறது.

மேலும் இந்தியாவின் வடமாநிலங்களான உத்தரபிரதேசத்தில் உள்ள 14 தொகுதிகளிலும், பீகார் மாநிலத்தில் உள்ள 7 தொகுதிகளிலும், பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 13 தொகுதிகளிலும், மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஒரு தொகுதியிலும் மற்றும் யூனியன் பிரதேசங்களான தாத்ரா-நாகர்ஹவேலி, டையூ-டாமன் ஆகிய பகுதிகளில் தலா ஒரு தொகுதியிலும் காலை வாக்குப்பதிவு தொடங்கியது.

இந்நிலையில் இன்று நடைபெற்று வரும் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவில், குஜராத் மாநிலத்தில் தமது வாக்கை பதிவு செய்த பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது அவர்களது கட்சியின் சின்னமான தாமரையை கையில் ஏந்தியவாறு தொலைக்காட்சிகளுக்கு பேட்டி அளித்துள்ளதால் அது விதி மீறல் என கூறி பல்வேறு கட்சிகளும் கண்டம் வெளியிட்டுள்ளன.

தொடர்ந்து காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி தரப்பில் இந்த விவகாரத்தில், தகுந்த ஆதரங்களுடன் மோடிக்கு எதிராக தேசிய தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.