பாக் உளவு அமைப்புடன் தொடர்பு? இலங்கை நபர் சென்னையில் கைது

Image caption பாகிஸ்தான் உளவு நிறுவனத்துடன் தொடர்பு? இலங்கையைச் சேர்ந்தவர் சென்னையில் கைது

இந்தியாவின் மத்திய புலனாய்வு அமைப்புகளும் தமிழகக் காவல்துறையும் இணைந்து மேற்கொண்ட ஒரு நடவடிக்கையில் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ சேர்ந்தவராகக் கருதப்படும் ஒரு நபர் சென்னையில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

37 வயதான ஜாகிர் ஹுசைன் என்ற இந்த நபர் இலங்கையின் கண்டி பகுதியைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. செவ்வாய்க்கிழமையன்று கைதுசெய்யப்பட்ட இவர் ஒரு நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பயங்கரவாத அமைப்பிற்காக தமிழகத்தில் ஆட்சேர்ப்புப் பணியில் ஜாகிர் ஈடுபட்டிருந்ததாக மத்திய புலனாய்வு அமைப்புகள் கொடுத்த தகவலையடுத்து, தமிழ்நாடு காவல்துறையில் அடிப்படைவாத இயக்கங்களைக் கண்காணிக்கும் பிரிவான க்யூ பிரிவு அந்த நபரை செவ்வாய்க் கிழமையன்று கைதுசெய்துள்ளது.

அவரிடமிருந்து சில கள்ளநோட்டுகளும் வரைபடங்களும் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிகிறது.

1967ஆம் ஆண்டின் சட்டவிரோத தடுப்புச் சட்டம் இந்தியக் குற்றவியல் சட்டம் 120 பி ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்யப்படுள்ளது.

இலங்கையிலிருந்து செயல்படும் பாகிஸ்தானைச் சேர்ந்த நபரின் அறிவுறுத்தலின்படி செயல்பட்டதாகச் சொல்லப்படும் ஜாகிர் ஹுசேனுக்கு யாருடன் தொடர்புகள் இருக்கின்றன, அவருடைய முழுமையான நோக்கங்கள் என்ன என்பது குறித்து தொடர் விசாரணைகளை மேற்கொள்ளவிருப்பதாக தமிழக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையிலிருந்து இந்த நபர் சுற்றுலாப் பயணிகளுக்கான விசாவில் இந்தியாவுக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. இவருடைய புகைப்படம் ஏதும் இதுவரை காவல்துறையினரால் வெளியிடப்படவில்லை.