சென்னை ரயில் நிலையத்தில் குண்டு வெடிப்பு-ஒருவர் பலி

Image caption குண்டு வெடிப்பு நடந்த ரெயில்

சென்னையில் உள்ள சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 14 பேர் காயமடைந்துள்ளனர்.

கௌஹாத்தி - பெங்களூர் எக்ஸ்பிரஸ் ஒன்பதாவது நடைமேடையில் இருந்தபோது அந்த ரயிலின் எஸ் - 4, எஸ் 5 பெட்டிகளில் இரண்டு குண்டுகள் அடுத்தடுத்து வெடித்தன.

இந்த குண்டு வெடிப்பில் ஒருவர் உயிரிழந்தார். பதினான்கு பேர் காயமடைந்தனர்.

உயிரிழந்த பெண்ணின் பெயர் ஸ்வாதி என்று அறியப்பட்டுள்ளது. இவர் ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்தவர்.

காயமடைந்தவர்கள் அனைவரும் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எதிரில் உள்ள அரசு ராஜீவ் காந்தி பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்துள்ள பதினான்கு பேரில் இருவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை தேவைப்பட்டதால், அவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப்படுவதாகவும் மீதமிருக்கும் 12 பேர் சாதாரண காயங்களுடன் சிகிச்சைபெற்றுவருவதாகவும் தமிழ்நாடு அரசின் சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். காயமடைந்த அனைவரும் அபாயகட்டத்தைத் தாண்டிவிட்டதாகவும் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

கௌஹாத்தி – பெங்களூர் ரயிலில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த பெட்டிகள் அகற்றப்பட்டு, மீதமிருக்கும் பெட்டிகளுடன் அந்த ரயில் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்றுள்ளது.

அகற்றப்பட்ட பெட்டிகளில் தடயவியல் நிபுணர்களும் வெடிகுண்டு நிபுணர்களும் ஆய்வு மேற்கொண்டுவருகின்றனர்.

நிவாரணம்

ரயில்வே துறையின் சார்பில் இந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ஒரு லட்ச ரூபாய் நிவாரணத் தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது. பலத்த காயமடைந்தவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாயும் லேசான காயமடைந்தவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாயும் நிவாரணத் தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசும் இறந்தவரின் குடும்பத்திற்கு ஒரு லட்ச ரூபாயும் பலத்த காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் சாதாரண காயமடைந்தவருக்கு 25 ஆயிரம் ரூபாயும் நிவாரணத் தொகையாக அறிவித்துள்ளது.

இதனிடையே, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் படிப்படியாக அனைத்து சேவைகளும் இயல்பு நிலைக்கு திரும்பிவருகின்றன.

பாதுகாப்பு அதிகரிப்பு

இந்த குண்டுவெடிப்பை அடுத்து சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அனைத்துப் பயணிகளும் பலத்த பாதுகாப்பிற்குப் பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டுவருகின்றனர்.

குண்டு வெடிப்புக்கான காரணம் தெரியவில்லை என தமிழக காவல்துறைத் தலைவர் ராமானுஜம் தெரிவித்துள்ளார். தற்போது குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணை ரயில்வே காவல்துறையிடமிருந்து இருந்து சி.பி.சி.ஐ.டி. சிறப்பு புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

தகவல்களைப் பெறுவதற்காக பெங்களூருக்கு 080 22876288 என்ற எண்ணும் சென்னைக்கு 044 25357398 என்ற தொலைபேசி எண்ணும் ஹெல்ப் லைன் எண்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.