பெண்ணை உளவு பார்த்தமை: 'மோடி மீது விசாரணை'

நரேந்திர மோடி மீதான விசாரணை நடவடிக்கை அரசியல் பழிவாங்கல் என்று பாஜக கூறுகிறது

பட மூலாதாரம், PTI

படக்குறிப்பு,

நரேந்திர மோடி மீதான விசாரணை நடவடிக்கை அரசியல் பழிவாங்கல் என்று பாஜக கூறுகிறது

குஜராத்தில் இளம் பெண் ஒருவரை சட்டவிரோதமாக வேவு பார்ப்பதற்கு குஜராத் முதல்வர் நரேந்திர மோடி காவல்துறையினருக்கு உத்தரவிட்டதாக வௌியாகியிருந்த சர்ச்சை தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு நீதிபதி ஒருவர் விரைவில் நியமிக்கப்படுவார் என்று இந்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

ஷிம்லாவில் இன்று வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர், எதிர்வரும் மே 16-ம் தேதிக்கு முன்னதாக நீதிபதி ஒருவரை நியமிக்க அமைச்சரவை முடிவெடுத்துள்ளதாகக் கூறினார்.

'குஜராத்தின் முதல்வர் ஓர் இளம்பெண்ணின் வாழ்வில் உளவு பார்த்துள்ளார் என்றால், அவர் பிரதமரானால் இந்த நாட்டில் உள்ள பெண்களின் கதி என்னவாகும் என்று எனக்கு பயமாக உள்ளது' என்றார் சுஷில் குமார் ஷிண்டே.

மேலும், இந்திய நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றுவரும் இந்த நேரத்தில் இந்த அறிவிப்பு தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதாக அமையவில்லையா என்று கேட்கப்பட்டதற்கு, 'இந்த முடிவு மத்திய அமைச்சரவையால் 4 மாதங்களுக்கு முன்னதாகவே எடுக்கப்பட்டுவிட்டது. எனவே இது தேர்தல் நடத்தை விதிகளை மீறவில்லை' என்று அவர் பதிலளித்தார்.

குஜராத்தில் இளம் பெண் ஒருவரின் நடவடிக்கைகளை வேவுபார்க்க முதல்வர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் இருந்த அமித் ஷா, காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தார் என்று முன்னர் செய்திகள் வெளியாகியிருந்தன.

அது தொடர்பாக அமித் ஷாவுக்கும் ஐ.பி.எஸ். அதிகாரி ஜி.எல்.சிங்காலுக்கும் இடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடல் பதிவை சில இணையதள செய்தி நிறுவனங்கள் வெளியிட்டிருந்தன.

'அரசியல் பழிவாங்கல்'

இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று பல்வேறு பெண்கள் அமைப்பினரும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த விவகாரம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக்குழுவை அமைக்க கடந்த ஆண்டு டிசம்பரில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது.

ஆனால், இதுவரை எந்த ஓய்வுபெற்ற நீதிபதியும் இந்த விசாரணையை மேற்கொள்ள முன்வரவில்லை என்பதால் இதுவரை எவரும் இதற்காக நியமிக்கப்படவில்லை.

எனவே தான் விசாரணைக் குழுவை தலைமை தாங்க தற்போது பணியில் இருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரை நியமிக்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

நரேந்திர மோடிக்கு எதிரான இந்த நடவடிக்கை அரசியல் நோக்கம் கொண்ட பழிவாங்கும் செயல் என்பதால் இந்த விசாரணை ஆணையத்திற்கு தலைமை தாங்க எந்த ஒரு நீதிபதியும் ஒப்புக் கொள்ள மாட்டார் என்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் அருண் ஜேட்லி விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.