முல்லைப் பெரியாறு நீர்மட்டத்தை உயர்த்த உச்சநீதிமன்றம் அனுமதி

  • 7 மே 2014
Image caption முல்லைப் பெரியாறு அணை

முல்லை பெரியாறு அணை விவகாரத்தில், அதன் கொள்ளளவை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்த தமிழகத்துக்கு அனுமதி வழங்கி இந்திய உச்சநீதிமன்றம் இன்று புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.

பாதுகாப்புக் காரணங்களை கூறி, அணையின் நீர் மட்டத்தை உயர்த்த தடை விதிக்கும் சட்டத்தை கேரளா மாநில அரசு கடந்த 2006ம் வருடம் பிறப்பித்தது. இதற்கு எதிராக தமிழக அரசு தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் இன்று இந்த தீர்ப்பு வெளியாகியுள்ளது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம்.லோத்தா தலைமையிலான ஐந்து நீதிபதிகளை உள்ளடக்கிய அரசியல் சட்ட அமர்வு பிறப்பித்துள்ள இந்த உத்தரவில், தமிழக அரசின் உரிமையை பறிக்க கேரளா அரசுக்கு அதிகாரம் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கேரளா அரசு இந்த விவகாரத்தில் புதிய சட்டத்தை நிறைவேற்றி தமிழக அரசை கட்டுப்படுத்த முடியாது என்றும் அதனால் கேரளா அரசு வகுத்த சட்டம் செல்லாது என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

இந்திய அரசியல் சாசனத்துக்கு எதிராக இவ்வாறு புதிய சட்டங்களை மாநில அரசுகள் வகுப்பது தவறு என்று தெரிவித்த உச்சநீதிமன்றம், முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் அணையின் நீர் மட்டத்தை 142 அடிக்கு உயர்த்துவதை உறுதி செய்ய மூன்று பேர் கொண்ட குழு ஒன்றை அமைத்துள்ளது. தமிழக மாநில அரசு தரப்பில் ஒருவரும், கேரளா மாநில அரசு தரப்பில் ஒருவரும் இந்த குழுவில் இருப்பார்கள். மேலும் அந்த குழு ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் அணையின் கொள்ளளவு குறித்து ஆராயந்து, அறிக்கை அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த 2006ம் ஆண்டில் தமிழக அரசுக்கு சாதகமாக இது போன்ற தீர்ப்பு வெளியிடப்பட்டும், அதன் பின்னரே கேரளா மாநில அரசு புதிய சட்டத்தை வகுத்து நடவடிக்கை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் இந்த விவகாரத்தில் தமிழக அரசு தரப்பில் புதியதாக தொடுக்கப்பட்ட மனு மீதான விசாரணையில் இந்த தீர்ப்பு இன்று வெளியாகியுள்ளது.