கூடங்குளம் வழக்கு உச்சநீதிமன்றம் தள்ளுபடி

  • 8 மே 2014
கூடங்குளம் அணுமின் நிலையம்
Image caption கூடங்குளம் அணுமின் நிலையம்

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் பாதுகாப்பை உறுதி செய்யும் நீதிமன்றத்தின் பரிந்துரைகளை, இந்திய அணுசக்தி துறையும், அரசாங்கமும் பின்பற்றவில்லை என்று குற்றம் கூறி தாக்கல் செய்யப்பட்ட மனுவை இந்திய உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் மற்றும் விக்ரமஜித் சென் ஆகியோரை உள்ளடக்கிய அமர்வு இன்று பிறப்பித்துள்ள உத்தரவில், நீதிமன்றத்தின் பெரும்பாலான பரிந்துரைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், அணு மின் உலையின் பாதுகாப்பை உறுதி செய்ய தனியாக ஆய்வுக் குழுவை அமைக்க தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளது.

அணு உலைக் கழிவுகளை அகற்றும் போது, அப்போது கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று அதன் உத்தரவில், நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தின் கடலோரமாக அமைக்கப்பட்டுள்ள அணு உலைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய, இந்திய உச்சநீதிமன்றம் அறிவுறுத்திய 15 பரிந்துரைகளை மத்திய அரசு பின்பற்றத் தவறிவிட்டதாக தொடுக்கப்பட்ட வழக்கின் விசாரணை கடந்த பிப்ரவரி மாதம் நீதிபதி கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தலைமையிலான அமர்வு முன்பு நடைபெற்றது.

அப்போது கூடங்குளம் அணு மின்நிலையத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மத்திய அரசு தரப்பிடம் நீதிமன்றத்தின் அனைத்து பரிந்துரைகளும் பின்பற்றப்பட்டு பின்னர் துவக்கப்பட்டதா என்று கேள்வி எழுப்பிய அந்த அமர்வு, இது குறித்து அவர்கள் பதிலளிக்க கோரியும் உத்தரவிட்டது.

நடைபெற்று முடிந்த விசாரணையின் போது, இந்த வழக்கை தொடுத்த பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த மனுதாரரான சுந்தரராஜன் தரப்பில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆஜராகி வாதாடினார்.

அவரது வாதத்தில் அணு உலைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய உச்சநீதிமன்றத்தால் பரிந்துரைக்கப்பட்டுள்ள 15 பரிந்துரைகளையும், உரிய முறையில் பின்பற்ற மத்திய அரசு தவறியுள்ளதாகக் கூறினார்.

இந்த வழக்கில் மத்திய அரசு தரப்பில் அப்போது வாதாடிய அட்டர்னி ஜெனரல் வாகனவதி, ஏற்கனவே அணு உலையில் மின் உற்பத்தி தொடங்கப்பட்டு விட்டது என்றும், எந்த விதாமான பாதிப்புகளையும் ஏற்படுத்தாமல் அந்த அணு உலைகள் சிறப்பாக இயங்கி வருவதால் இந்த மனுவை தேவையற்றதாகக் கருதி வழக்கைத் தள்ளுபடி செய்யவும் கோரினார். மேலும் இந்த விவகாரத்தில் ஒரு சில பரிந்துரைகளை மட்டுமே நிறைவேற்ற சில கால அவகாசம் தேவைப்படுவதாகவும், அவையும் சிறப்பாக விரைவில் நிறைவேற்றப்படும் என்றும் குறிப்பிட்டார்.

தற்போது வெளியாகியுள்ள இந்த உத்தரவு குறித்து கருத்து கூறிய போராட்டக்குழு உறுப்பினர்கள், இந்த தீர்ப்பை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்றார்கள். தொடர்ந்து எங்களுடைய கோரிக்கைகளை மக்கள் முன்வைத்து, அவர்களின் ஆதரவை பெற்று இந்த விவகாரத்தில் நியாயம் கிடைக்க செய்வோம் என்றும் கூறினார்கள்.