பெரியாறு அணை: உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கேரளாவில் வேலை நிறுத்தம்

கேரளா
Image caption கேரளா

பெரியாறு அணையில் தமிழ்நாடு கோரியபடி 142 அடிவரை தண்ணீர் தேக்கலாம் என்று இந்திய உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகாந்திரமாக, கேரளாவில் வியாழனன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

பெரியாறு அணையின் கொள்ளளவை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்த, தமிழகத்துக்கு அனுமதி வழங்கி இந்திய உச்சநீதிமன்றம் நேற்று புதன்கிழமை தீர்ப்பளித்தது. இதற்கு எதிராக இன்று வியாழக்கிழமை கேரளா மாநிலத்தில் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டம் துவங்கி நடைபெற்று வருகிறது. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்கள் எவையும் இன்று இயக்கப்படவில்லை. ஆனாலும் அத்தியாவசியப் பொருட்களுக்கு அங்கே தட்டுப்பாடு ஏற்படவில்லை என்று அம்மாநில அரசு கூறியுள்ளது.

இந்த போராட்டம் அமைதியான முறையில் நடைபெற்று வந்தாலும், பதற்றமான பகுதியாக கருதப்படும் இடுக்கி மாவட்டத்தில் மட்டும் காவல் துறையினர் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் உள்ள ஒரு சில அமைப்புகளால் நடத்தப்படும் இந்த போராட்டத்திற்கு அம்மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் கட்சி மட்டும் ஆதரவு தெரிவித்துள்ளது.

மேலும் நேற்று புதன்கிழமை இரவு கூடிய கேரள மாநில அமைச்சரவை கூட்டத்தில், இந்த வழக்கு தொடர்பில் மறு சீராய்வு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது. இது குறித்து கருத்துக் கூறிய அம்மாநில முதல்வர் உம்மன் சாண்டி, உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு துரதிஷ்டவசமானது என்று குறிப்பிட்டதோடு, இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் மக்களின் பாதுக்காப்பை கருத்தில் கொள்ளாமல் முடிவு எடுத்துள்ளதாக குறை கூறினார்.

தமிழகத்திற்கு தண்ணீர் வழங்குவதில் தங்களுக்கு பிரச்சனை இல்லை என்று கூறிய உம்மன்சாண்டி, அணையின் பாதுக்காப்பு குறித்து மட்டுமே தாங்கள் கவலை கொள்வதாக தெரிவித்தார். 119 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த அணைக்கு மாற்றாக இன்று இல்லாவிட்டாலும் நாளை புதிய அணை கட்டவேண்டிய தேவை ஏற்படும் என்பதால், அச்சத்தோடு வாழும் அப்பகுதி மக்களின் குறையை தீர்க்கவே தற்போது போராடி வருவதாகவும் அவர் கூறினார்.

கேரள மாநிலத்தின் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அம்மாநில முன்னாள் முதல்வருமான அச்சுதானந்தன், கேரள அரசு தரப்பில் இந்த வழக்கில் முறையாக வாதங்களை முன்வைக்காத காரணத்தால்தான் இதில் கேரளா தோல்வியை சந்தித்துள்ளதாக குற்றம்சாட்டினார். அந்த அணையின் பகுதிகளில் வாழும் 35 லட்சம் எண்ணிக்கையிலான மக்களின் வாழ்வாதாரம் சம்பந்தப்பட்ட விவகாரத்தில் மாநில அரசு இவ்வாறு அலட்சியம் காட்டியிருக்கக் கூடாது என்றும் அவர் கூறினார்.