நூற்றாண்டு பழமையான கோயிலில் அனைவரும் அர்ச்சகர் ஆகிறார்கள்

  • 10 மே 2014
படத்தின் காப்புரிமை www.vitthalrukminimandir.org
Image caption பந்தர்பூர் விட்டல் ருக்மணி கோயில்

இந்தியாவில் சுமார் 900 ஆண்டுகள் பழமையான இந்துக் கோயில் ஒன்றில் முதன்முறையாக பெண்களும் பிராமணர் அல்லாதவர்களும் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மஹராஷ்டிர மாநிலத்தில் பந்தர்பூர் என்ற நகரில் உள்ள, மாநில அரசுக்கு சொந்தமான புகழ்பெற்ற விட்டல் ருக்மணி கோயிலிலேயே காலியாக உள்ள அர்ச்சகர்கள் பொறுப்புக்கு விண்ணப்பங்கள் கோரி பொதுவான விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

இதுவரை காலமும் இரண்டு பிராமண-சமூகங்கள் பூஜை, சடங்குகளை ஆற்றிவந்த இந்தக் கோயிலின் நிர்வாகம் தொடர்பில் இந்திய உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பொன்றை அடுத்தே இந்த புதிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.

'இந்தியாவில் பாரம்பரியமான, ஆகம விதிமுறைப்படியான கோவில்களில் பூஜைகள் உள்ளிட்ட அனைத்து மதச் சடங்குகளும் பிராமணர்களால் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வரும் நூற்றாண்டு கால வழக்கத்தை மாற்றும் முதல் முயற்சி இது' என்று விட்டல் ருக்மணி கோயில் அறக்கட்டளையின் தலைவர் அண்ணா டாங்கே தெரிவித்துள்ளார்.

பெண்களும் அர்ச்சகர்கள் ஆகிறார்கள்

கோவிலின் பாரம்பரிய சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் புரியத் தெரிந்த பிரமணர் அல்லாத இந்துக்களும் பெண்களும் அர்ச்சகர் பொறுப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்று காலியாக உள்ள 8 அர்ச்சகர்கள் பணிக்கான விளம்பரம் கடந்த வாரம் வெளியானது.

மாநிலம் எங்கிலும் இருந்து ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் பாதயாத்திரையாக வந்து வழிபடும் இந்தக் கோயிலில் பல நூற்றாண்டுகளாக படுவே மற்றும் உத்பாத் ஆகிய இரண்டு பிராமண-சமூகங்களைச் சேர்ந்தவர்களே பூஜைகளையும் சடங்குகளையும் ஆற்றிவந்துள்ளனர்.

பூஜைகளிலும் பிற சடங்குகளிலும் இந்த சமூகங்களுக்கு இருந்துவந்த ஏகபோகத்தை எதிர்த்து கோயிலின் அறக்கட்டளை மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

கோயிலின் வருமானம் மற்றும் பூஜைகள் தொடர்பில் இந்த இரண்டு சமூகங்களும் தமது பரம்பரை உரிமைகளை இனிமேல் கோர முடியாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அந்தத் தீர்ப்பை எதிர்த்து படுவே மற்றும் உத்பாத் என்ற சமூகங்களைச் சேர்ந்தவர்கள் உச்சநீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்திருந்தன.

உச்ச நீதிமன்றமும் அந்த கோவிலின் வருவாய் மற்றும் சடங்குகள் தொடர்பில் இந்த சமூகங்களுக்கு உள்ள பிரத்தியேக பரம்பரை உரிமைகளை நிராகரித்து தீர்ப்பளித்துள்ளது.