இந்தியாவில் இறுதி கட்ட வாக்குப்பதிவு நடந்துள்ளது

படத்தின் காப்புரிமை AFP GETTY
Image caption வாராணசியில் வாக்குப்பதிவு

இந்திய மக்களவைக்கான 9-ஆவது மற்றும் இறுதிக் கட்ட வாக்குப்பதிவு நடந்துள்ளது.

இதுவரை இல்லாத அளவில் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் 66.38% வாக்குகள் பதிவாகியுள்ளன. இதற்கு முன்னர் அதிக வாக்குபதிவு இருந்த தேர்தல் 1984 நாடாளுமன்றத் தேர்தலாகும். அப்போது 64.01% வாக்குகள் பதிவாகியிருந்தன.

உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், பிகார் ஆகிய 3 மாநிலங்களில் உள்ள 41 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

பிகார் மாநிலத்தில் 6 மக்களவை தொகுதிகளிலும், உத்தரப்பிரதேசத்தில் 18 மக்களவை தொகுதிகளிலும், மேற்கு வங்கத்தில் 17 மக்களவை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது.

இன்றைய வாக்குப்பதிவில் மொத்தம் 606 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இன்றைய வாக்குப்பதிவில் 6 கோடியே 61 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். மொத்தம் 71,254 வாக்குச்சாவடிகளில் நடைபெறும் வாக்குப்பதிவில் 1 லட்சத்திற்கும் அதிகமான வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்ப்படுத்தப்படுகின்றது.

மக்களவைக்கு கடந்த மாதம் 7ஆம் தேதி தொடங்கி, 9 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதுவரை 8 கட்டங்களாக, 502 மக்களவை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.

நட்சத்திர வேட்பாளர்கள்

இன்றைய தேர்தலில் போட்டியிடுபவர்களில், பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடியும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலும் உத்திர பிரதேசத்தின் வாராணசி தொகுதியில் போட்டியிடுகின்றனர். சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஆஸம்கர் தொகுதியிலும், மத்திய அமைச்சர்களான திர் ரஞ்சன் சௌத்ரி மேற்கு வங்கத்தின் பெர்ஹாம்பூர் தொகுதியிலும், ஆர்.பி.என். சிங் உத்தரப்பிரதேசத்தின் குஷிநகர் தொகுதியிலும், சமீபத்தில் காங்கிரஸ் கட்சியிலிருந்து பாஜக கட்சிக்கு மாறிய ஜகதாம்பிகா பால் உத்திர பிரதேசத்தின் டோமரியாகஞ்ச் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். அத்துடன் முன்னாள் அமைச்சரும், ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் மூத்த தலைவருமான ரகுவன்ஷ் பிரசாத் சிங் பிஹார் மாநிலத்தின் வைசாலி தொகுதியில் போட்டியிடுகிறார்.

9 கட்டத் தேர்தல்களிலும் பதிவான வாக்குகளை எண்ணும் பணி, எதிர்வரும் வெள்ளிக்கிழமை ( மே 16ஆம் தேதி) நடைபெறுகிறது.

கருத்துக் கணிப்புகள்

‘எக்ஸிட் போல்ஸ்’ எனப்படும் வாக்குப்பதிவின் முடிவில் வெளியிடப்படும் கருத்துக் கணிப்புகளை இன்று இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு மேல் வெளியிடலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மக்களவை தேர்தலையொட்டி, வாக்குப்பதிவின் முடிவில் வெளியிடப்படும் கருத்துக் கணிப்புகளை வெளியிட முன்னதாக தேர்தல் ஆணையம் அனுமதி மறுத்தது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.