பதவி விலகும் மன்மோகன் சிங் பிரதமராக கடைசி உரை

  • 17 மே 2014
பத்து ஆண்டுகாலம் பிரதமராக இருந்தவர் மன்மோகன் சிங் படத்தின் காப்புரிமை AP
Image caption பத்து ஆண்டுகாலம் பிரதமராக இருந்தவர் மன்மோகன் சிங்

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் தோல்வியை அடுத்து நாட்டின் பிரதமர் பதவியிலிருந்து விலகும் மன்மோகன் சிங் நாட்டு மக்களுக்கு பிரதமராக தனது கடைசி உரையை ஆற்றியுள்ளார்.

மக்களின் தீர்ப்பை அனைவருமே ஏற்கவும் மதிக்கவும் வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள அவர், நடந்து முடிந்த தேர்தல்கள் இந்தியாவில் ஜனநாயகத்தை மேலும் ஆழமாக வேறூன்றச் செய்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

தனது வாழ்க்கையும், பதவிக்காலமும் எப்போதுமே ஒரு திறந்த புத்தகமாக இருந்துவந்துள்ளது என்றும், தன்னால் முடிந்த அளவுக்கு தனது கடமைகளை உண்மையுடனும் ஈடுபாட்டுடனும் தான் ஆற்றிவந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா பாகிஸ்தான் பிரிவினையினால் பாதிக்கப்பட்ட ஒரு ஏழைச் சிறுவனான தனக்கு இந்த மாபெரும் தேசத்தின் உச்ச பதவிக்கு உயர்த்திய இந்த தேசத்துக்கே தன்னுடைய வெற்றியின் அனைத்து பெருமையும் சேரும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியா ஒரு உலகப் பொருளாதாரமாகவும் வல்லவரசாகவும் பரிமளிக்கும் காலம் வந்துவிட்டது என்று தான் நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஆளவிருக்கும் புதிய அரசாங்கத்துக்கு தனது வாழ்த்துக்களை அவர் தெரிவித்துள்ளார்.