மோடியை பிரதமராக அறிவிக்கும் பாஜக கூட்டம் 20-ம் திகதி

படத்தின் காப்புரிமை Reuters
Image caption பதவியேற்பு தேதி இன்னும் முடிவுசெய்யப்படவில்லை

நரேந்திர மோடியை பிரதமராக முறைப்படி தேர்ந்தெடுக்கும் பாஜகவின் நாடாளுமன்ற குழுக் கூட்டம் எதிர்வரும் 20ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் என்று பாரதிய ஜனதா கட்சி அறிவித்துள்ளது.

தில்லியில் இன்று சனிக்கிழமை நடந்த பாஜகவின் பாராளுமன்ற குழுவின் சந்திப்பிற்கு பின்னரே இந்த அறிவிப்பை பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் தலைமையில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் நரேந்திர மோடி, முத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் பங்கேற்றனர்.

வரும் 20ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் மற்றக் கட்சிகளும் கலந்துகொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவிற்கான தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் அறிவிக்கப்பட்டது. அடுத்த பாராளுமன்ற குழுக் கூட்டத்தில், நரேந்திர மோடி முறையாக பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டப் பின்னரே பதவியேற்பு விழாவிற்கான தேதி முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.