ஜல்லிக்கட்டு தடையை எதிர்த்து தமிழகம் மறுசீராய்வு மனு தாக்கல்

ஜல்லிக்கட்டு படத்தின் காப்புரிமை AP

இந்தியாவில் ஜல்லிக்கட்டு மற்றும் ரேக்ளா பந்தய விளையாட்டுகளுக்கு தடை விதித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, தமிழக அரசு தரப்பில் திங்கள்கிழமையன்று மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கலாசார அடையாளங்களாக கருதப்படும் ஜல்லிக்கட்டு எனப்படும் பிரத்யேக காளைகளை மனிதர்கள் தழுவும் நிகழ்வையும், காளை மாடுகளை வண்டிகளில் இணைத்து நடத்தப்படும் ரேக்ளா பந்தய விளையாட்டுகளையும் தடை செய்யக் கூடாது என்று வலியுறுத்தி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் கேளிக்கைக்காக என்று மட்டும் இல்லாமல் பாரம்பரிய வழக்க முறையாகவும் இது போன்ற விளையாட்டுகள் குறிப்பிட்ட தினங்களில் மட்டும் நடத்தப்படுவதையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மனிதர்களின் கேளிக்கைக்காக, விலங்குகளை கொடுமைப்படுத்தி நடத்தப்படும் இது போன்ற போட்டிகளை அனுமதிக்க இயலாது என்று கடந்த மே மாதம் 7ம் தேதி கூறிய உச்சநீதிமன்றம் அதற்கு தடை விதித்தது.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் மற்றும் பி.சி.கோஷ் ஆகியோரை உள்ளடக்கிய அமர்வு பிறப்பித்துள்ள அந்த உத்தரவில், காளை மாடுகளை இது போன்ற போட்டிகளுக்கு பயன்படுத்த அனுமதி வழங்கும் சட்டத்தை மத்திய அரசு கொண்டுவர எடுத்துள்ள முயற்சியையும் தடுத்து நிறுத்தி வைத்திருக்கிறது .

இந்த தீர்ப்பு வெளியாகிய பிறகு ஒரு சில இடங்களில் ரேக்ளா பந்தய விளையாட்டுகள் சிறிய அளவில் நடத்த திட்டமிடப்பட்ட போதும் அவை காவல் துறை அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டன.

மேலும் இது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்ததை அடுத்து தமிழகத்தில் பல பகுதிகளிலும், இதற்கான பிரத்யேக இனமாடுகள் அதிகளவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.

அந்த வகையில் விற்கப்படும் மாடுகள் குறைந்த விலை போவதாகவும், அதிகளவில் மாட்டு இறைச்சிக்காக மட்டுமே வாங்கப்படுவதாகவும் அதன் உரிமையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில், ஜல்லிக்கட்டு காளைகளை கொலைக்களத்தில் தள்ளிவிடாதீர்கள், அவற்றைப் பராமரிக்க இயலாதவர்கள் கோசாலைக்கு அனுப்புங்கள் என்று இந்து முன்னணி அமைப்பாளர் ராம.கோபாலன் வெளியிட்ட அறிக்கையிலும் வேண்டுகோள் விடுத்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் இது தொடர்பில் ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டன.

பின்னர் இதற்காக ஜல்லிக்கட்டுப் போட்டிகள் தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற அனுமதி பெறப்பட வேண்டும் என திமுக தலைவர் வெளியிட்ட அறிக்கையிலும் கோரியுள்ளார்.

அதில் தமிழக அரசு மறு ஆய்வு மனுவை முன்னெடுக்க வேண்டும் என்றும் திமுக கேட்டுள்ளது.