பாமகவுக்கு அமைச்சரவையில் இடம்? " மோடி முடிவு செய்வார்": அன்புமணி

Image caption "மோடிதான் முடிவெடுப்பார்" : அன்புமணி

இந்தியாவில் பாஜக தலைமையில் உருவாகவிருக்கும புதிய அமைச்சரவையில் , தமிழகத்தில் அதன் கூட்டணிக் கட்சிகளிலிருந்து வெற்றிபெற்ற பாமகவுக்கு இடம் கிடைக்குமா என்பது குறித்து மோடிதான் முடிவெடுப்பார் என்கிறார் முன்னாள் அமைச்சரும் , தர்மபுரி தொகுதியிலிருந்து வெற்றி பெற்ற வேட்பாளருமான அன்புமணி ராமதாஸ்.

யார் அமைச்சராவது என்பதை பிரதமராகவுள்ள நரேந்திர மோடிதான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறிய அன்புமணி, ஆனால் தமிழகத்திலிருந்து இரண்டு உறுப்பினர்கள்தான் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் வென்றுள்ளனர். தமிழகத்துக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்படவேண்டும், தமிழ்நாட்டுக்குத் தேவையான முன்னேற்றத்திட்டங்கள் முன்னெடுத்துச் செல்லப்படவேண்டும் என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்களிடம் இருக்கிறது என்று அவர் தெரிவித்தார்.

ஆனால் இந்த பிரச்சினை குறித்து தாங்கள் நரேந்திர மோடியிடமோ அல்லது பாஜக தலைவர்களிடமோ வலியுறுத்தவில்லை என்று கூறிய அன்புமணி ராமதாஸ், அவர்கள் எந்த முடிவு எடுத்தாலும் அதை வரவேற்போம் என்றார்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கூட்டணிக் கட்சிகளை அமைச்சரவையில் சேர்ப்பது குறித்து இதுவரை எந்தத் தகவலும் வரவில்லை என்றும் அவர் கூறினார்.

தமிழகத்தில் பாமக ஒரு தொகுதியைத் தவிர போட்டியிட்ட வேறு எல்லா தொகுதிகளிலும் தோல்வி அடைந்திருப்பது பற்றி கேட்டதற்கு பதிலளித்த அன்புமணி ராமதாஸ், இந்தத் தேர்தலில் நாடெங்கும் வீசியது மோடி அலை என்றால், தமிழகத்தில் அதிமுகவின் பண அலை வீசியது; பணத்தை வைத்தும், அதிகாரிகளை வைத்தும் தேர்தல் ஆணையத்தை வைத்தும் இந்த வெற்றியை அதிமுக பெற்றிருக்கிறது. ஆனால் திமுக மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுவிட்டது என்றும் அவர் கூறினார். இது ஒரு வரலாறு என்று கூறிய அன்புமணி, மக்கள் திமுகவை ஓரங்கட்டிவிட்டார்கள் அடுத்த தேர்தலில் அதிமுகவையும் அவர்கள் ஓரங்கட்டுவார்கள் என்றார்.

தர்மபுரி மற்றும் கன்யாகுமரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்கள் வென்றது, சாதி மற்றும் மத ரீதியாக பிரிந்ததே காரணம் என்று சில கருத்துக்கள் வெளியாகியிருப்பதை சுட்டிக்காட்டியபோது, இந்த மாதிரி சில ஊடகங்கள் தவறாகக் குறிப்பிடுகின்றன. தர்மபுரியில் மக்கள் தீர்ப்பு தனக்கு ஆதரவாக வந்திருக்கிறது, மக்கள் தர்மபுரியில் முன்னேற்றம் வேண்டுமென்று வாக்களித்திருக்கிறார்கள், இதை சாதி என்று கூறி கொச்சைப் படுத்தக்கூடாது ,அனைத்து தரப்பு மக்களும் எனக்கு வாக்களித்திருக்கிறார்கள் என்றார் அன்புமணி.