மார்க்ஸிஸ்ட் தலைவர் ஆர்.உமாநாத் காலமானார்

Image caption உமாநாத்

முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் ஆர் உமாநாத் தமது 92 ஆவது வயதில் இன்று புதன்கிழமை திருச்சியில் காலமானார்.

இந்திய சுதந்திர போராட்ட வீரரும் மூத்த கம்யூனிஸ்ட் தலைவர்களில் ஒருவருமான ஆர். உமாநாத் 1922ஆம் ஆண்டு கேரளாவின் காசரகோட்டில் ராம்நாத் ஷெனாய், நேத்ராவதி தம்பதியின் கடைசி மகனாகப் பிறந்தவர். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. ஹானர்ஸ் படிக்கும் காலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு அதில் இணைந்தார். 1940ல் சென்னை சதி வழக்கில் பி. ராமமூர்த்தியுடன் கைதுசெய்யப்பட்ட அவர் மூன்று ஆண்டுகளை சிறையில் கழித்தார். அவருடைய அரசியல் வாழ்க்கையில் ஒட்டுமொத்தமாக ஒன்பதரை ஆண்டுகளை சிறையில் கழித்திருக்கும் அவர், 7 ஆண்டுகள் தலைமறைவாகவும் இருந்திருக்கிறார். இந்தியா விடுதலை பெற்ற பிறகும் 1949ல் ரயில்வே தொழிலாளர் போராட்டத்தை தலையேற்று நடநத்தினார். நெருக்கடி நிலை காலகட்டத்திலும் பல அடக்குமுறைகளைச் சந்தித்தவர்.

புதுக்கோட்டை தொகுதியிலிருந்து 1962, 1967 என இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினாரகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உமாநாத், 1977, 1980 ஆகிய ஆண்டுகளில் நாகப்பட்டிணம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் விவாகரக் குழு உறுப்பினாரவும் உமாநாத் இருந்தார்.

திருச்சி மாவட்டத்தில் இருக்கும் பல தொழிற்சங்கங்கள், விவசாய சங்கங்களை உருவாக்கியதில் முக்கியப் பங்குவகித்தார் உமாநாத்.

1952ஆம் ஆண்டு பாப்பாவை திராவிட இயக்கத் தலைவர் பெரியார் தலைமையில் திருமணம் செய்தார். பாப்பா உமாநாத் 2010ஆம் ஆண்டில் காலமானார். இந்தத் தம்பதிக்கு லட்சுமி, வாசுகி, நிர்மலா என மூன்று மகள்கள் இருக்கின்றனர். இவர்களில் மருத்துவரான லட்சுமி ஏற்கனவே இறந்துவிட்டார்.

உடல் நலக் குறைவால் சில காலம் அவதிப்பட்டு வந்த உமாநாத் திருச்சியில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு காலமானார். பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது உடல் திருச்சியிலுள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. 22ஆம் தேதி அவரது இறுதிச் சடங்குகள் நடக்கும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இவருடைய மறைவுக்குத் தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.