காங்கிரஸ் நாடாளுமன்றக் குழு கூட்டம்: சோனியா மீண்டும் தலைவராகத் தேர்வு

சோனியா காந்தி படத்தின் காப்புரிமை AFP GETTY
Image caption சோனியா காந்தி

இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்த நிலையில், தில்லியில் நடந்துள்ள அக்கட்சியின் நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் கட்சியின் தலைவராக சோனியா காந்தி மீண்டும் தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற குழுக்கூட்டம் இன்று மாலை துவங்கி தொடர்ந்தும் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், நாடாளுமன்ற கட்சி தலைவர் பதவிக்கு சோனியா காந்தி பெயரை மல்லிகார்ஜூன கார்கே முன்மொழிந்தார். அதனை தொடர்ந்து மூத்த தலைவர்கள் சிலர் வழிமொழிந்தனர்.

இதனிடையே நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் துணைத்தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் பங்கேற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பில், இருவரும், கலந்துகொள்வார்கள் என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது.

இன்றைய கூட்டத்தில் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சி தலைவர் நரேந்திர மோடிக்கு வாழ்துக்கள் தெரிவிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளாக பிரதமர் மன்மோகன் சிங் ஆற்றிய சேவைகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற கூட்டதில் பேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சி தோல்வியடைவது இது முதல் முறையல்ல என்றும் இதற்கு முன்பும் இதேபோல் தோல்வியடைந்து அதிலிருந்து அக்கட்சி மீண்டு வந்துள்ளது என்றும் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் விவாதங்களை எழுப்புவது, கேள்விகள் கேட்பது மூலம் சிறந்த எதிர்கட்சியாக காங்கிரஸ் செயல்படும் என்றும் சோனியா காந்தி தெரிவித்தார்.

நடந்து முடிந்த இந்திய நாடாளுமன்ற தேர்தலில் நாடளவில் வெறும் 44தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியுள்ளது. மக்களவையில் எதிர்கட்சி அங்கீகாரம் பெற்ற கட்சியாக இருக்க குறைந்தபட்சம் 55 இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால் அதற்கும் குறைவான இடங்களையே காங்கிரஸ் வென்றுள்ளதால் நாடாளுமன்றத்தில் அக்கட்சிக்கு எதிர்கட்சி அந்தஸ்து கிடைக்குமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. இது குறித்து இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்கட்சியாக அங்கீகாரம் பெற்றால், மக்களவை எதிர்கட்சி தலைவர் பதவியை காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் மற்றும் மாநிலங்களவை எதிர்கட்சி தலைவர் பதவி காங்கிரஸ் தலைவர் ஏ.கே.அந்தோணிக்கு வழங்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.