2-ஜி வழக்கு: ராசா, கனிமொழி ஜாமீன் மனுத் தாக்கல்

படத்தின் காப்புரிமை agencies
Image caption கனிமொழி

இரண்டாம் அலைக்கற்றை முறைகேடு வழக்கு தொடர்பில் அமலாக்கத்துறை தாக்கல் செய்திருந்த குற்றப்பத்திரிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த முன்னாள் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட 9 பேர் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை மே 28-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தயாளு அம்மாள் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. மனநலக் குறைவு காரணமாக, 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் இருந்து முழுவதுமாக விலக்கு அளிக்கக் கோரி தயாளு அம்மாள் சார்பில் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

மனுவை ஏற்ற தில்லி நீதிமன்றம், இன்று ஒரு நாள் மட்டும் நேரில் ஆஜராவதிலிருந்து அவருக்கு விலக்கு அளித்துள்ளது. அத்துடன் அந்த மனு மீது அமலாக்கத் துறை மே 28ம் தேதி பதிலளிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாக ஆ.ராசா, கனிமொழி, தயாளு அம்மாள் உள்ளிட்ட 10 பேர் மற்றும் 9 நிறுவனங்கள் மீது குற்றம்சாட்டி அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

மே 28-இல் விசாரணை

இன்று வழக்கு விசாரணையின் போது, வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் ஒப்படைக்குமாறு அமலாக்கப் பிரிவினருக்கு நீதிபதி ஓ.பி.சைனி உத்தரவிட்டார்.

ஆவணத்தை முழுமையாக படிக்க கால அவகாசம் வேண்டும் என்று குற்றம்சாட்டப்பட்டவர்கள் கோரியதை அடுத்து வழக்கு விசாரணையை 28-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ஓ.பி.சைனி உத்தரவிட்டார்.

கனிமொழி, ராசா மட்டுமல்லாமல், ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் ஷாஹித் உஸ்மான் மற்றும் வினோத் கேன்கா, பாலிவூட் தயாரிப்பாளர் கரீம் மொரானி, கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத் குமார் ஆகியோர் உள்ளிட்ட 9 பேர் தங்களின் ஜாமீன் மனுவை தாக்கல் செய்தனர்.

இந்த பணமோசடி வழக்கில் திமுக நடத்தும் கலைஞர் டிவிக்கு ஸ்வான் டெலிகாம் நிறுவனம் தரப்பில் 200 கோடி ரூபா பணம் வழங்கப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை பெற்ற ஸ்வான் டெலிகாம் நிறுவனம் அதற்கு கைமாறாக கலைஞர் டிவிக்கு அந்த 200 கோடி ரூபா பணம் அளித்ததாக அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்த ஜாமீன் மனுக்களின் விசாரணையுடன் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவர்களின் மீது எந்தெந்த குற்றஞ்சாட்டுகள் பதிவுசெய்யப்படும் என்ற வாதங்களும் மே மாதம் 28ஆம் தேதி நடைபெறும் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.