சகல பிரச்சினைகள் பற்றியும் இந்தியாவுடன் விவாதிக்கத் தயார்- நவாஸ் ஷரிப்

படத்தின் காப்புரிமை Reuters
Image caption இரு தரப்புப் பிரச்சினைகள் அனைத்தையும் விவாதிக்கத் தயார்- நவாஸ் ஷரிப்

பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான எல்லா பிரச்சனைகளை குறித்தும் கலந்துரையாட தனது அரசாங்கம் தயாராகவுள்ளதாக இன்று புது தில்லியில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ்ஷரிப் தெரிவித்துள்ளார்.

இன்று இந்திய தலைநகர் தில்லியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரிப், நரேந்திர மோடியின் அழைப்பினை ஏற்று கொண்டு நீண்ட காலத்திற்கு பிறகு தில்லிக்கு வந்திருப்பதில் தான் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தார்.

இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘இன்று எனக்கும் நரேந்திர மோடிக்கும் இடையே ஒரு நல்ல ஆக்கப்பூர்வமான சந்திப்பு நடைபெற்றது. ஒரு நல்ல சூழலில் அந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பு இந்த இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுணர்வு வாய்ப்புகளை உருவாக்கும் ஒரு முயற்சியாக நாங்கள் இருவரும் கருதுகிறோம்’ என்று தெரிவித்தார்.

அத்துடன் இரு நாட்டுத் தலைவர்களுமே, தங்களது பதவிக்காலத்தின் ஆரம்ப கட்டத்தில் ஒரு தெளிவான திட்டத்துடன் இருப்பதாகவும், இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளில் ஒரு புதிய பக்கத்தை திருப்பலாம் என்ற மக்களின் எதிர்ப்பார்ப்புகளை பூர்த்தி செய்ய இது ஒரு நல்ல வாய்ப்பை அளிக்கிறது என்றும் அவர் நரேந்திர மோடியிடம் தெரிவித்ததாக அவர் கூறினார்.

‘கடந்த 1999ஆம் ஆண்டில் நான் பிரதமர் வாஜ்பாய்க்கு லாகூருக்கு வரக்கோரி விடுத்த அழைப்பை நான் நரேந்திர மோடியிடம் நினைவுகூர்ந்தேன். 1999ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நிறுத்தப்பட்ட லாகூர் ஒப்பந்தத்தை மீண்டும் துவங்கும் நோக்கத்தில் நான் உள்ளேன் என்று நான் அவருக்கு தெரிவித்தேன்,’ என்றார் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரிப்.

அத்துடன் வளர்ச்சி மற்றும் பொருளாதார மறுமலர்ச்சி என்ற நோக்கங்கள் இரு நாடுகளுக்கும் உள்ளது என்றும் நாட்டில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை இருந்தால் மட்டுமே அதை நம்மால் அடைய முடியும் என்றும், இந்த பகுதிகளில் உள்ள உறுதியற்ற மற்றும் பாதுகாப்பற்ற நிலையை மாற்ற இருநாடுகளும் செயல்ப்பட வேண்டும் என்று தான் மோடியிடம் தெரிவித்ததாகவும் நவாஸ் ஷரிப் தெரிவித்தார்.

அமைதி முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்காக இரு நாடுகளும் இணைந்து செயல்ப்படுவது மிக முக்கியம் என்று தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர், இங்கு நிலவும் மோதல்களை ஒத்துழைப்பாக நாம் மாற்ற வேண்டும் என்று மோடியிடம் வலியுறுத்தியதாக தெரிவித்தார்.

அனைத்து மட்டங்களிலும் பொதுவான நோக்கத்தோடு செயல்பட வேண்டும் என்று இரு பிரதமர்களும் ஒப்புகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது உணர்வுகளுக்கு நரேந்திர மோடி நல்ல முறையில் பதிலளித்தார் என்று கூறிய நவாஸ் ஷரிப் தனது இந்திய வருகையை இந்திய மக்கள் ஒரு சிறந்த அடையாளமாக கருதுகின்றனர் என்று மோடி தனக்கு தெரிவித்ததாகவும் கூறினார்.

அத்துடன் இன்றைய சந்திப்பை தொடர்ந்து இரு நாட்டு வெளியுறவு செயலாளர்களும் விரைவில் சந்தித்து இரு தரப்பு கொள்கைகளையும் ஒன்றிணைத்து முன்னெடுத்து செல்வார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்திய குடியரசு தலைவருடன் தான் தொலைபேசியில் உரையாற்றியதாகவும், அதில் தனக்கு மிகுந்த மகிழ்ச்சி என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தச் செய்தி குறித்து மேலும்