காஷ்மீர் அந்தஸ்து -சர்ச்சை தொடர்கிறது

படத்தின் காப்புரிமை PTI
Image caption காஷ்மீரின் ஸ்ரீநகரில் தால் ஏரியில் படகுச் சவாரி - எழில்மிகு காஷ்மீரின் எதிர்காலம் குறித்த சர்ச்சை

காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370ஐ ரத்துசெய்வதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களை மனம் மாறச் செய்யத் தேவையான முயற்சிகளை மத்திய அரசு மேற்கொள்ளும் என்று நேற்று பொறுப்பேற்ற பிரதமர் அலுவலக இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்த கருத்து உருவாக்கிய சர்ச்சை தீவிரமடைந்துள்ளது.

ஜிதேந்தர் சிங், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370-ன் நன்மை தீமை குறித்து விவாதிக்க அரசு தயாராக இருப்பதாக நேற்று தெரிவித்தார். அந்த கருத்து பல தரப்பினரிடமிருந்து விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

துணை அமைச்சரின் கருத்துக்கு காஷ்மீர் மாநில முதலமைச்சர் உமர் அப்துல்லா மற்றும் அம்மாநில மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெகபூபா முப்தி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தான் தெரிவித்த கருத்து ஊடகங்களால் திரித்து கூறப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள இணையமைச்சர் ஜிதேந்திர சிங், பிரதமர் மோடி தெரிவித்ததாக தான் எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை என்றும் இதுதொடர்பான சர்ச்சைகள் ஆதாரமற்றவை என்றும் விளக்கமளித்துள்ளார்.

காஷ்மீர் மாநிலத்திற்கு இந்திய அரசியலமைப்பு சட்டம் 370ன்படி வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தின்படி, இந்திய பாராளுமன்றத்தில் இராணுவம், தகவல் தொடர்பு, வெளியுறவு விவகாரம், ஆகிய துறைகளைத் தவிர்த்து மற்ற துறைகளில் இயற்றப்படும் எந்த சட்டமும் கஷ்மீர் சட்டசபையின் ஒப்புதல் இன்றி காஷ்மீர் மாநிலத்தில் அமலுக்கு வராது.

இந்நிலையில் மத்திய துணை அமைச்சரின் இந்த சர்ச்சைக்குறிய அறிவிப்பிற்கு கண்டனம் தெரிவித்த காஷ்மீர் மாநிலத்தின் மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெகபூபா முப்தி, இந்த சர்ச்சை தொடர்பில் இந்திய பிரதமர் தலையிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

" இந்த சர்ச்சை தொடர்பில் பிரதமர் மோடி தலையிட்டு, ஜம்மூ காஷ்மீர் மக்களின் கண்ணியத்திலும் மரியாதையிலும் இந்த உலகத்தில் உள்ள எந்த சக்தியும் விளையாடாது என்று உறுதியளிப்பார் என்று நம்புகிறேன். இந்த 370ஆவது சட்டப் பிரிவை ரத்து செய்வது தொடர்பிலான கருத்துகளை நாங்கள் கேட்பது இதுவே கடைசிமுறையாக இருக்க வேண்டும். இந்த 370ஆவது சட்டம் குறித்து விவாதிக்க வேண்டும் என்றால் அந்த சட்டத்தை எவ்வாறு மேம்படுத்தலாம் என்று விவாதிக்க வேண்டும். காஷ்மீர் மக்களின் இழப்பை எவ்வாறு சரி செய்ய முடியும் என்று விவாதிக்க வேண்டும்" , என்றார் மெகபூபா முப்தி.

ஜிதேந்திர சிங் கருத்துக்கு நேற்று கண்டனம் தெரிவித்திருத்த உமர் அப்துல்லா, காஷ்மீர் மாநிலத்திற்கு இந்திய அரசியலமைப்பு சட்டம் 370ன்படி சிறப்பு அந்தஸ்து குறித்த விவாதத்திற்கு மத்திய அரசு தயார் என்று அறிவித்துள்ளது கண்டிக்கத்தக்கது என்றும், காஷ்மீருக்கான 370 வது சட்டப்பிரிவை ரத்து செய்தால், எதிர்காலத்தில் காஷ்மீர் மாநிலம் இந்தியாவில் இருக்காது என்றும் தெரிவித்திருந்தார்.

ஒமர் அப்துல்லாவின் இந்த கருத்துக்கு பதில் அளித்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நிர்வாகக் குழு உறுப்பினரான ராம் மாதவ், '370ஐ ரத்து செய்தால் காஷ்மீர் இந்தியாவில் இருக்காது என்று ஒமர் கூறுவதற்கு காஷ்மீர் ஒன்றும் அவர்கள் வீட்டு சொத்து இல்லையே என்றும், பிரிவு 370 இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, காஷ்மீர் எப்பொழுதும் இந்தியாவின் ஒரு பகுதிதான்,' என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு இன்று பதிலளித்த காஷ்மிர் மாநில முதலமைச்சர், காஷ்மீர் எங்கள் வீட்டு சொத்து என்று நான் எப்போதுமே கூறியதில்லை என்றும் காஷ்மீரின் நல்வாழ்வு குறித்து பேச ஒவ்வொரு காஷ்மீர் குடிமகனுக்கும் உரிமை உண்டு என்றும் தெரிவித்துள்ளார். அத்துடன் காஷ்மீர் மாநிலத்திற்கு பிரிவு 370இன் படி வழங்கப்பட்டுள்ள அந்தஸ்தை ரத்து செய்ய யாருக்கும் அதிகாரம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் இந்த சர்ச்சை தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர் மனிஷ் திவாரி, இந்திய அரசியலமைப்பு பற்றிய ஒரு அடிப்படை புரிதலுக்கு பிறகே இதுபோன்ற முக்கிய விவகாரம் தொடர்பில் கருத்து தெரிவிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்திய அரசியலமைப்பு சட்டம் 370இன் 2ஆவது மற்றும் 3ஆவது பிரிவின்படி அரசியலமைப்பு சபையின் ஒப்புதல் இல்லாமல் இந்த சட்டம் 370ஐ ரத்து செய்ய முடியாது என்றும் காங்கிரஸ் தலைவர் மனிஷ் திவாரி தெரிவித்துள்ளார். இந்திய அரசியலமைப்பு சட்டம் 370இன் 3ஆவது பிரிவின் படி இந்த அரசியலமைப்பு சபையின் தெளிவான ஒப்புதலுக்கு பின்னரே இதை ரத்து செய்வது தொடர்பிலான உத்தரவை இந்திய குடியரசு தலைவர் பிறப்பிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.