இந்தியாவின் 29வது மாநிலமாக தெலங்கானா உதயம்

படத்தின் காப்புரிமை dhananjay
Image caption தெலங்கானாவின் முதல்வராகப் பதவியேற்றார் சந்திரசேகர் ராவ்

இந்தியாவின் புதிய , 29வது மாநிலமாக, தெலங்கானா மாநிலம், ஆந்திரப்பிரதேசத்திலிருந்து முறையாகப் பிரிந்து இன்று உதயமாகியது.

புதிய மாநிலத்தின் முதல் முதலமைச்சராக தெலங்கானா ராஷ்ட்ர சமிதிக் கட்சித் தலைவர் கே.சந்திரசேகர் ராவ் , பதவியேற்றார்.

முன்னதாக புதிய மாநிலம் உருவாவதைக் குறிக்கும் வண்ணம் பட்டாசுகள் , வாண வேடிக்கைகளுடன் ஹைதராபாத் நகரில் கொண்டாட்டங்கள் நடந்தன.

பல தசாப்தங்களாக இருந்து வரும் தெலங்கானா தனி மாநிலக்கோரிக்கை கடந்த 15 ஆண்டுகளில் தீவிரமடைந்தது.

ஆந்திர மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்து வந்த தெலங்கானா பகுதி பொருளாதார ரீதியாக புறக்கணிக்கப்பட்டது என்று கருத்துக்கள் நிலவின. 35 மிலியன் மக்கள்தொகை கொண்ட இந்தப் புதிய மாநிலத்தில் ஆந்திராவிலிருந்து 10 மாவட்டங்களும், தலைநகர் ஹைதராபாதும் இணைக்கப்படுகின்றன.

ஆனால் அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஹைதராபாத் நகரே பிரிந்த தெலங்கானா மற்றும் சீமாந்திரா ஆகிய இரு மாநிலங்களுக்கும் கூட்டுத் தலைநகராக இருக்கும்.