1993 மும்பை குண்டுவெடிப்பு : யாகுப் மேமனை தூக்கிலிட இடைக்காலத் தடை

இந்திய உச்சநீதிமன்றம் படத்தின் காப்புரிமை AFP
Image caption இந்திய உச்சநீதிமன்றம்

1993ஆம் ஆண்டின் மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட யாகுப் மேமனை தூக்கிலிட இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளது.

மேலும், யாகுப் மேமன் கருணை மனு நிராகரிப்பு மறு ஆய்வு மனு தொடர்பில் மஹராஷ்ட்ரா மாநில அரசுக்கு நோட்டீஸ் ஒன்றும் அனுப்பப்பட்டுள்ளது.

தூக்கு தண்டனை மீதான மறு ஆய்வு மனுக்களை அரசியல் சாசன அமர்வே விசாரிக்க வேண்டும் என்றும் சாதாரண அமர்வு விசாரிக்க முடியாது என்றும் நீதிபதிகள் கே.எஸ்.கேஹர் மற்றும் சி.நாகப்பன் தெரிவித்தனர்.

யாகுப் மேமன் கருணை மனு நிராகரிப்பு மறு ஆய்வு மனு விசாரணையை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றியும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதற்கு முன்னர் தொடுக்கப்பட்ட தில்லி செங்கோட்டை குண்டு வெடிப்பு சம்பவம் குற்றவாளியின் மனுவுடன் சேர்த்து இந்த மனுவையின் அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

மும்பை குண்டுவெடிப்பு வழக்கின் குற்றவாளி யாகுப் மேமனின் கருணை மனு இந்திய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியால் நிராகரிக்கப்பட்டது.

சிறப்பு தடா நீதிமன்றத்தால் வழங்கப்பட்டு பின் மும்பை உயர் நீதிமன்றத்தால் உறுதிசெய்யப்பட்ட யாகுப் மேமனின் தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 21ஆம் தேதி அன்று உறுதி செய்தது.