வருமான வரி வழக்கு: ஜூன் 9 நீதிமன்றத்தில் ஆஜராக ஜெயாவுக்கு உத்தரவு

படத்தின் காப்புரிமை BBC World Service
Image caption வருமான வரி வழக்கு: நேரில் ஆஜராக ஜெயலலிதாவுக்கு நீதிமன்றம் உத்தரவு

வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாத வழக்கில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், அவரது தோழி சசிகலாவும் ஜூன் 9ஆம் தேதி தேதி ஆஜராக வேண்டுமென சென்னை பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா 1993-1994 ஆண்டில் வருமானம் குறித்த கணக்கை வருமான வரித்துறைக்கு சமர்ப்பிக்கவில்லை என சென்னை பொருளாதாரக் குற்றங்களுக்கான நீதிமன்றத்தில் வருமான வரித் துறையால் 1996ஆம் ஆண்டில் வழக்குத் தொடரப்பட்டது.

அதற்குப் பிறகு சசிகலா மீதும் இதே போன்ற வழக்கு 1997ல் ஆண்டில் வருமான வரித் துறையால் தொடரப்பட்டது. அதேபோல, 91-92, 92-93 ஆகிய ஆண்டுகளில் சசி எண்டர்பிரைசசும் அதன் பங்குதாரர்களான ஜெயலலிதாவும் சசிகலாவும் வருமான வரிக் கணக்கைத் தாக்கல்செய்யவில்லை எனக் கூறி, 1997ல் மேலும் ஒரு வழக்கைத் தாக்கல் செய்தது வருமானவரித் துறை.

இந்த வழக்குகளைத் தள்ளுபடி செய்யவேண்டுமெனக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் 2006ல் நிராகரிக்கப்பட்டன.

பிறகு, உச்ச நீதிமன்றத்திலும் மேல் முறையீடு செய்யப்பட்டது.

இந்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம் நான்கு மாதங்களுக்குள் விசாரணையை முடிக்கும்படி பெருநகர நீதிமன்றத்திற்கு கடந்த ஜனவரி 30ஆம் தேதியன்று உத்தரவிட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்படுவதற்காக ஏப்ரல் 3ஆம் தேதியன்று ஜெயலலிதாவும் சசிகலாவும் நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னைப் பெருநகர நீதிமன்றம் உத்தரவிட்டது.

இருந்தபோதும், ஏப்ரல் மூன்றாம் தேதியன்றும் ஜெயலலிதாவும் அவரது தோழி சசிகலாவும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

பதிலாக, தங்களுக்கு நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டுமென அவர்கள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவைப் பரிசீலித்த நீதிபதி தட்சிணாமூர்த்தி, நேரில் ஆஜராகாமல் இருப்பது குறித்த மனு எதையும் இனி ஏற்க முடியாது என்றும் வரும் ஏப்ரல் 10ஆம் தேதியன்று இருவரும் நேரில் ஆஜராக வேண்டுமென்றும் உத்தரவிட்டார்.

இதற்கிடையில், வழக்கை முடிப்பதற்கு வழங்கப்பட்ட மூன்று மாத கால அவகாசம் போதாது எனக் கூறி, உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா தரப்பில் மேலும் கால அவகாசம் பெறப்பட்டது. அந்த உத்தரவை நீதிமன்றத்தில் சமர்ப்பித்த ஜெயலலிதா தரப்பினர், தேர்தல் நடைமுறைகள் முடியும்வரை வழக்கை ஒத்திவக்கும்படி கோரினர். அதன்படி வழக்கு மே 19ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

முதல்வர் ஜெயலலிதாவும் அவரது தோழி சசிகலாவும் எப்போது நேரில் ஆஜராக வேண்டுமென்பது அப்போது முடிவுசெய்யப்படும் என நீதிபதி தட்சிணாமூர்த்தி தெரிவித்திருந்தார். அதன் பிறகு இந்த வழக்கு ஜூன் மூன்றாம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வழக்கை ஜூன் 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி தட்சிணாமூர்த்தி, ஜெயலலிதா, சசிகலா இருவரும் ஜூன் ஒன்பதாம் தேதி ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.