கர்தினால் லூர்துசாமி வாட்டிகனில் மரணம்

Image caption காலமானார் கர்தினால் லூர்துசாமி

கத்தோலிக்கத் திருச்சபையில் கர்தினால் பதவி வரை உயர்ந்த ஒரே தமிழரான துரைசாமி சைமன் லூர்துசாமி ஜூன் மாதம் 2ஆம் தேதியன்று காலமானார்.

1924ஆம் வருடம் பிப்ரவரி 5ஆம் தேதியன்று பிறந்த இவர், ரோமன் க்யூரியாவில் பணியாற்றிய ஒரே ஆசியக் கண்டத்தவர்.

செஞ்சியிலுள்ள கல்லேரி என்ற சிற்றூரில் பிறந்த இவர், திண்டிவனம், கடலூர் ஆகிய நகரங்களில் தனது பள்ளிக் கல்வியைப் பெற்றவர்.

கல்லூரிக் கல்வியை சென்னை லயோலா கல்லூரியில் படித்த இவர், திருச்சபை சட்டக் கல்வியை ரோமில் படித்து, டாக்டர் பட்டம் பெற்றார். 1962ல் புதுவையில் ஆயராக நியமிக்கப்பட்ட அவர், 1968ல் பெங்களூர் பேராயராக நியமிக்கப்பட்டார். 71ல் ரோமிலிருக்கும் மறைபரப்புப் பேராயத்தின் இணைச் செயலராக உயர்ந்தவர் அடுத்த ஆண்டே ரோம் அர்பன் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரானார்.

1985ல் மே 25ஆம் தேதி திருத்தந்தை இரண்டாம் ஜான்பாலால் கார்தினலாக உயர்த்தப்பட்டார் லூர்துசாமி. 1996ல் கார்டினல் அருட்பணியாளர் என்ற நிலையைத் தேர்ந்துகொண்டார் லூர்துசாமி.

வியாழக்கிழமையன்று காலை பதினோரு மணிக்கு செயிண்ட் பீட்டர் பேராலய பீடத்தில் கார்தினல் குழுத் தலைவர் ஆஞ்சலோ சொடானோ அடக்கத் திருப்பலி ஆற்றியபிறகு, போப் பிரான்சிஸ் பிரியாவிடை ஜெபங்களைச் செய்யவிருக்கிறார்.

அதற்குப் பிறகு சனிக் கிழமையன்று அவரது உடல் புதுவைக்கு கொண்டுவரப்படுகிறது. அன்றும் ஞாயிற்றுக் கிழமையும் பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டிருக்கும். பிறகு, திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு அவரது உடல் புதுவை தூய அமலோற்பவ அன்னை பேராலயத்தில் அடக்கம் செய்யப்படவிருக்கிறது.

இந்தியாவில் போப்பின் தூதரான சால்வாத்தோர் பென்னாச்சியோ உள்ளிட்ட இந்தியாவைச் சேர்ந்த பல பேராயர்கள் இந்த இறுதிச் சடங்கில் கலந்துகொள்கின்றனர்.

எளிமையும், கடின உழைப்பும் நிறைந்த மனிதராக அறியப்பட்ட கார்தினல் லூர்துசாமி, அவர் பெங்களூர் மறைமாவட்டத்தின் பேராயராகப் பணியாற்றியபோது, அதனை ஒரு முன்மாதிரி மறைமாவட்டமாக்க அவர் ஆற்றிய பணிகள் இப்போதும் நினைவுகூரப்படுகின்றன.