ஹிமாச்சல்: அணை திறக்கப்பட 24 மாணவர்களை அடித்துச் சென்றது வெள்ளம்

இறந்தவர்கள் ஆந்திராவைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் ஆவர் படத்தின் காப்புரிமை AFP GETTY
Image caption இறந்தவர்கள் ஆந்திராவைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் ஆவர்

இந்தியாவின் ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் ஆறொன்றில் ஏற்பட்ட திடீர் நீர் எழுச்சியில் அடித்துச்செல்லப்பட்ட 24 மாணவர்களை தேடும் பணி மீண்டும் துவங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அந்த சம்பவம் நடந்த குலு பள்ளத்தாக்கில் உள்ள பியாஸ் ஆற்றிலிருந்து இதுவரை மூன்று சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக மூத்த அதிகாரி தேவேஷ் குமார் பிபிசியிடம் தெரிவித்தார்.

அந்த ஆற்றின் குறுக்காக கட்டப்பட்டுள்ள ஒரு அணையிலிருந்து தண்ணீர் வெளியிடப்பட்டதால்தான் இந்த நீர் எழுச்சி ஏற்பட்டதாக அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்த நீர் எழுச்சி ஏற்பட்டபோது அதை புகைப்படம் எடுக்க அந்த மாணவர்கள் அவர்களது பேருந்திலிருந்து இறங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர பிரதேச மாநிலத்திலிருந்து வந்த பொறியியல் கல்லூரி மாணவர்கள் ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தின் பிரபல சுற்றுலா தளமான மனாலிக்கு பயணித்துக்கொண்டிருந்தபோது மாநில தலைநகர் ஷிம்லாவிலிருந்து 200 கிலேமீட்டர் தொலைவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

அந்த அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படுவதற்கு முன்பு சரியான எச்சரிக்கை அளிக்கப்படாதது ஏன் என்று கண்டித்து, ஆத்திரமிக்க உள்ளூர் மக்களும் சுற்றுலா பயணிகளும் சாலை மறியலில் ஈடுபட்டனர் என அங்கிருக்கும் உள்ளூர் செய்தியாளர் ஒருவர் கூறுகிறார்.

ஞாயிற்றுகிழமை மாலை உள்ளூர் நேரப்படி சுமார் 7:30 மணி அளவில் அந்த ஆற்றின் ஓரத்தில் நின்று புகைப்படம் எடுக்க பேருந்திலிருந்து மாணவர்கள் இற்ங்கிச்சென்றதாக ஹிமாச்சல பிரதேச மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ஜி.எஸ்.பாலி தெரிவித்துள்ளார்.

லார்ஜி மின் திட்ட அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டதாக அம்மாநில முத்த அரசு அதிகாரி ராகேஷ் கன்வார் தெரிவித்துள்ளார்.

தண்ணீர் அதிக உயரத்துக்கு எழும்புவதை முன்கூடியே பார்த்த சில மாணவர்கள், அந்த இடத்திலிருந்து ஓடி விட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

"ஆற்றின் கரையில் இருந்தவர்களை நீர் அடித்து சென்றதை நாங்கள் பார்த்தோம். அவர்கள் கீழே விழு, அலைகளால் மூழ்கடிக்கப்பட்டனர். காவல்துறையினர் நீண்ட நேரம் கழித்தே சம்பவ இடத்திற்கு வந்தனர். ஒரு மீட்பு நடவடிக்கையை துவங்கத் தேவையான எதையுமே அவர்கள் கொண்டுவரவில்லை", என உயிர்தப்பியவர்களில் ஒருவரான சுமிரன் செய்தி நிறுவனம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.