இன்ஃபோஸிஸிலிருந்து விலகினார் நாராயண மூர்த்தி

நாராயண மூர்த்தி
Image caption இன்ஃபோஸிஸ் நிறுவனத்தை இந்தியாவின் பெருநிறுவனங்களில் ஒன்றாக மாற்றியிருந்தவர் நாராயண மூர்த்தி

இந்தியாவில் கணினி மென்பொருள் பெருநிறுவனமான இன்ஃபோஸிஸின் தோற்றுநர்களில் ஒருவரான நாராயண மூர்த்தி அந்நிறுவனத்தின் தலைமை அதிகாரி பொறுப்பிலிருந்து விலகியுள்ளார்.

விஷால் சிக்கா என்பவர் புதிய தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஓய்வு பெற்றிருந்த நாராயண மூர்த்தி, சென்ற ஆண்டு நிறுவனத்துக்கு திரும்பி வந்து தலைமை அதிகாரியின் பொறுப்பை மீண்டும் ஏற்றிருந்தார்.

இன்ஃபோஸிஸ் நிறுவனத்தின் லாபத்தில் ஏற்பட்டிருந்த தொய்வை சரிசெய்வதற்காக, ஐந்து ஆண்டு காலம் தலைமை அதிகாரி பொறுப்பை நாராயண மூர்த்தி ஏற்பார் என்று அப்போது தீர்மானிக்கப்பட்டிருந்தது.

ஆனால் அவரது வருகைக்கு, பின்னர் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் பலர் நிறுவனத்திலிருந்து விலகியிருந்தனர்.

இந்த சூழலில், திட்டமிடப்பட்டிருந்ததற்கு நான்கு ஆண்டுகள் முன்பாகவே நாராயண மூர்த்தி இன்ஃபோஸிஸிலிருந்து விலகியுள்ளார்.

எஸ் ஏ பி என்ற மென்பொருள் நிறுவனத்தின் நிர்வாகக் குழு செயல் உறுப்பினராக இருந்தவர் சிக்கா ஆவார்.

தோற்றுநர் அல்லாத ஒருவர் இன்ஃபோஸிஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக ஆவதென்பது இதுவே முதல்முறை.

படத்தின் காப்புரிமை infosys
Image caption புதிய தலைமை அதிகாரி விஷால் சிக்கா

ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் சிக்கா நிறுவனத்துக்குப் பொறுப்பேற்கவுள்ளார்.

இந்தியாவின் மென்பொருள் நிறுவனங்கள் கடந்த சில ஆண்டுகளாக நல்ல வளர்ச்சி கண்டு வந்திருந்தாலும் அண்மைய காலமாக தொழிலின் வளர்ச்சி வேகம் குறைந்துள்ளது.

அமெரிக்கா, ஐரோப்பா போன்ற முக்கிய சந்தைகளில் பொருளாதார வளர்ச்சி மந்தமானது, இந்திய மென்பொருள் நிறுவனங்களின் சேவைகளுக்கான தேவையைக் குறைத்து அவர்களது வளர்ச்சியில் தொய்வை ஏற்படுத்தியது.

இன்ஃபோஸிஸ் நிறுவனத்தின் வளர்ச்சியும், அதிகரித்துவரும் போட்டி காரணமாக, பாதிக்கப்பட்டிருந்தது.

டாட்டா கன்சல்டன்ஸி சர்வீசஸ் போன்ற போட்டி நிறுவனங்களிடம் இன்ஃபோஸிஸ் தனது வாடிக்கையாளர்களை இழந்து வந்தது.

கடந்த மார்ச் 31ஆம் தேதியோடு முடிந்த நிதியாண்டில் இன்ஃபோஸிஸின் வருமானமும் லாபமும் முந்தைக்கு அதிகரித்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தாலும், அதன் வளர்ச்சி வேகம் குறைவதாக கவலைகள் எழுந்திருந்தன.

மேலும் அண்மைய மாதங்களில் அதன் மூத்த அதிகாரிகள் பலர் நிறுவனத்தை விட்டு வெளியேறியதும் நிறுவனத்துக்குள் அச்சங்களைத் தோற்றுவித்திருந்தது.

ஆனாலும் வளர்ச்சி காணும் புதிய விஷயங்களில் கவனம் செலுத்தி இன்ஃபோஸிஸின் தொழிலை பெருக்க வழியுண்டு என புதிய தலைமை அதிகாரி சிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.