சொத்துக்குவிப்பு வழக்கு: நிறுவனங்கள் மீதான தீர்ப்பு இன்று மாலை?

படத்தின் காப்புரிமை AP
Image caption சொத்துக்குவிப்புக் குற்றச்சாட்டு

தமிழக முதல்வர் ஜெயலலிதா வருமானத்துக்கு மீறிய சொத்துக்களை குவித்ததாகத் தொடுக்கப்பட்ட வழக்கில் இணைக்கப்பட்டுள்ள லெக்ஸ் பிராப்பர்ட்டீஸ் நிறுவனம், மேடோ அக்ரோ பார்ம் உள்ளிட்ட ஐந்து நிறுவனங்களும் தங்களை இந்த வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில், இன்று மாலை பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வருமானத்துக்கும் மீறிய சொத்துக்களை குவித்ததாகக் கூறி தொடுக்கப்பட்ட வழக்கில் தொடர்புடைய நிறுவனங்களாக கருதப்படும் லெக்ஸ் பிராப்பர்ட்டீஸ் நிறுவனம், மேடோ அக்ரோ பார்ம் உள்ளிட்ட ஐந்து நிறுவனங்களும் அதற்கு மறுப்பு தெரிவித்து வருகின்றன.

மேலும் இதற்காக முடக்கப்பட்ட அவர்களது சொத்துக்களை விடுவிக்கக் கோரியும் அவர்கள் நீதிமன்றங்களில் தொடர்ந்து முறையிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சொத்து குவிப்பு வழக்கின் இறுதி கட்ட விசாரணை முடிவு பெறவுள்ள சமயத்தில் அதில் இணைக்கப்பட்டுள்ள ஐந்து நிறுவனங்கள் தரப்பில், அவர்களுடைய முடக்கப்பட்ட சொத்துக்களை உடனடியாக விடுவிக்க கோரி மீண்டும் பெங்களுரு சிறப்பு நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை முடிவடைந்துள்ளதால், இன்று மாலை இதன் தீர்ப்பு வெளியாகும் என்றும் எதிர்ப்பார்க்கபடுகிறது.

நேற்று செவ்வாய்க்கிழமை இந்த வழக்கு தொடர்பான முக்கிய விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என்று இந்திய உச்சநீதிமன்றம் கூறியதை அடுத்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை நாளை 19ம் தேதி வியாழக்கிழமை முதல் தொடரும் என்று நீதிபதி ஜான் மைக்கல் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.