இராக்கின் மோசுல் நகரில் 40 இந்தியர்கள் கடத்தல் ?

படத்தின் காப்புரிமை AP
Image caption வன்முறை அதிகரித்து வரும் இராக்

வன்முறை மோதல்கள் உக்கிரமடைந்துவரும் இராக்கில், மொசூல் நகரில் உள்ள சுமார் 40 இந்தியர்களுடனான தொடர்பை இந்திய அதிகாரிகள் இழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது.

‘எங்களின் சிறந்த முயற்சிகளையும் மீறி இராக்கில் சிக்கியுள்ள சில இந்தியர்களுடன் தொடர்பு இழந்துவிட்டோம். அவர்கள் கட்டுமானத் தொழிலாளர்கள். அவர்களைத் தொடர்பு கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன ’, என்று செய்தி ஊடகம் ஒன்றிடம் தெரிவித்தார், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் சயித் அக்பருத்தின்.

இராக்கில் நடந்து வரும் வன்முறை மோதல்களில் மொசூல் மற்றும் திக்ரித் நகரங்கள் ஐசிஸ் ஆயுதக் குழுவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் நேற்று அவசரக் கூட்டம் நடைபெற்றதாகவும், இராக்கில் உள்ள இந்தியர்களை மீட்கும் பணியை ஒருங்கிணைக்க இராக்கின் முன்னாள் தூதர் சுரேஷ் ரெட்டி தற்போது பாக்தாதுக்கு செல்லவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திக்ரித் என்ற நகரின் மருத்துவமனையில் பணி புரியும் 46 இந்திய நர்ஸ்களை மீட்கும் பணியில் இந்திய அரசாங்கம் செயல்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் அந்த 46 பேர்களில் சிலரே உடனடியாக இந்திய வர தயாராகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் வாங்கிய கடன்களினால் மத்திய கிழக்கில் வேறு பகுதிகளில் வேலை வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்று சிலர் கோருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் செய்தி குறித்து மேலும்