முல்லைப் பெரியாறு: மேற்பார்வைக்குழு அமைக்க இந்திய அரசு அனுமதி

Image caption முல்லைபெரியாறு அணை சர்ச்சை: மேற்பார்வைக்குழு அமைக்க மத்திய அரசு முடிவு

நிர்ணயிக்கப்பட்ட முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டத்தின் அளவை உறுதி செய்யவும், பாதுகாப்பு பணிகளைக் கண்காணிக்கவும் அதற்கான மேற்பார்வைக் குழுவை அமைக்க இந்திய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் அணையின் நீர் மட்டத்தை 142 அடிக்கு உயர்த்துவதை உறுதி செய்ய மூன்று பேர் கொண்ட குழு ஒன்றை அமைக்க இந்திய உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கின் விசாரணையில் கடந்த மே மாதம் 7ம் தேதி அப்போது வெளியிடப்பட்ட தீர்ப்பில், முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டத்தின் அளவை 136 அடியிலுருந்து 142 அடியாக உயர்த்த தமிழக அரசுக்கு அனுமதி வழங்கியது.

அதைத் தொடர்ந்து இந்த நீர்மட்டத்தின் அளவை உயர்த்தும் விவகாரத்தில் அதை உறுதி செய்ய மேற்பார்வை குழு ஒன்றை அமைக்கவும் உச்சநீதிமன்றம் கூறியது.

அந்த குழுவில் மூன்று பேர் இடம் பெற வேண்டும் என்றும், அதில் தமிழக மாநில அரசு தரப்பில் ஒருவரும், கேரளா மாநில அரசு தரப்பில் ஒருவரும் இந்தக் குழுவில் இருக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.

அத்தோடு அந்த குழு ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் அணையின் கொள்ளளவு குறித்து ஆராயந்து, அறிக்கை அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணையின் பாதுக்காப்பு தொடர்பிலான விவகாரங்களிலும் இந்த மூன்று பேரை உள்ளடக்கிய மேற்பார்வைக் குழு கவனம் செலுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அதற்காக விதிக்கப்பட்டிருந்த காலக்கெடு முடிவு பெறவுள்ளதால் இந்திய அரசு அந்த குழுவை அமைக்க இன்று புதன்கிழமை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது