மோடி அரசின் ஹிந்திக் கொள்கைக்கு ஜெயலலிதாவும் எதிர்ப்பு

படத்தின் காப்புரிமை pmindia.nic.in
Image caption ஆங்கிலமே வேண்டும், மோடிக்கு ஜெயா வேண்டுகோள்

மோடி அரசு, மத்திய அரசு அதிகாரிகளும் அமைச்சர்களும் சமூக ஊடகங்களில் முதலில் ஹிந்தியைப் பயன்படுத்தவேண்டும் என்று உத்தரவிட்டிருப்பதற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.

ஏற்கனவே இது குறித்து திமுக தலைவர் மு.கருணாநிதி தனது எதிர்ப்பைப் பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா எழுதிய கடிதம் ஒன்றில், மத்திய உள்துறை அமைச்சகம் இது குறித்து வெளியிட்டிருக்கும் அதிகார பூர்வ உத்தரவுகள் இரண்டை சுட்டிக்காட்டி, இவை மத்திய அரசு அதிகாரிகள் ,தங்கள் அதிகார பூர்வ சமூக ஊடகக் கணக்குகளிலிருந்து அனுப்பும் செய்திகளை, கட்டாயமாக ஹிந்தியில் அனுப்பவேண்டும், அல்லது ஹிந்தி மற்றும் ஆங்கிலம் இரண்டிலும் அனுப்பினால், முதலில் ஹிந்தியில் அனுப்பவேண்டும் என்று கூறப்பட்டிருப்பது, ஹிந்தி மொழி பயன்பாட்டை கட்டாயமாக்குவதாகவும், ஆங்கிலப் பயன்பாட்டை விருப்பத்தேர்வாக ஆக்குவதாகவும் கூறியிருக்கிறார்.

இந்த உத்தரவு இந்தியாவின் 1963ம் ஆண்டைய ஆட்சி மொழிச் சட்டத்திற்கு விரோதமானது , மேலும் 1976ல் பிறப்பிக்கப்பட்ட ஆட்சி மொழி விதிகளுக்கும் முரணானது என்றும் அவர் கூறியிருக்கிறார்.

இந்த விதிகளின்படி, இந்தி மொழி பேசாத மாநிலங்களுக்கு மத்திய அரசால் அனுப்பப்படும் அறிக்கைகள் மற்றும் தகவல்கள் ஆங்கிலத்தில்தான் அமைந்திருக்கவேண்டும் என்பதை சுட்டிக்காட்டிய ஜெயலலிதா, சமூக ஊடகங்கள் மூலம் அனுப்பப்படும் தகவல்கள் போன்றவை அனைத்துப் பிரிவு மாநிலங்களுக்கும் பொதுவானவை என்பதால்,அவை ஹிந்தியில் இருந்தால், ஹிந்தி பேசாத மாநில மக்களால் புரிந்து கொள்ளப்பட முடியாது. அந்த தகவல்கள் ஆங்கிலத்தில் இருக்கவேண்டும் என்று கூறியிருக்கிறார்.

'தமிழையும் ஆட்சி மொழியாக்குக'

மொழிப்பிரச்சினை தமிழ்நாட்டில் மிகவும் உணர்ச்சிகளைத் தூண்டக்கூடிய பிரச்சினை என்பதை சுட்டிக்காட்டிய ஜெயலலிதா, இந்த உத்தரவுகளை மாற்றியமைத்து, சமூக ஊடகங்களில் அதிகாரபூர்வ அறிக்கைகள் ஆங்கிலத்தில் அனுப்பப்படுவதை உறுதி செய்யுமாறு மோடியைக் கோரியிருக்கிறார்.

மேலும், தான் மோடியை ஜூன் 3ம் தேதி சந்தித்து அளித்த மனுவில், தமிழ் மொழியையும், இந்தியாவின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக அங்கீகரித்து உத்தரவிடவேண்டும் என்று கோரியிருப்பதை நினைவூட்டிய ஜெயலலிதா, இதையும் நிறைவேற்றுமாறும் மோடியை வலியுறுத்தியிருக்கிறார்.

இந்தச் செய்தி குறித்து மேலும்